Sunday, 23 February 2014

கரிசல்காவியம்13

கரிசல் மண்ணில் ஒரு காவியம்.13

அத்தியாயம் 13.

ராசா இன்று மிகவும் உற்சாகமாக இருந்தான்.ஒரே பாட்டும் ஆட்டமுமாக மிகவும் ஆனந்தமாக அங்கும் இங்கும் சுறுசுறுப்பாக ஒரு இடத்தில் இல்லாமல் ஓடி ஆடிக் கொண்டாட்டமாக் காணப்பட்டான்.இதைக்கண்ட அவன் தாய்,”என்ன இவனுக்கு ஆச்சு?என்னைக்கும் இல்லாத பொங்கம் இவனுக்கு.”என எண்ணிய அவள் “டேய் ராசா என்னடா உனக்கு?இன்னிக்கு இவ்வளவு சந்தோசமா இருக்கே? என்னடா சங்கதி?” எனக் கேட்டாள்.

“அப்படியா?அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா.அடுத்த வாரம் பரிச்ச வருதுல்ல அதான்.வேற ஒண்ணுமா இல்லம்மா.”எனச்சமாளித்தான்.
‘டேய் பெத்தவளுக்கு தெரியாதா புள்ளயோட அருமை.எல்லாம் எனக்குத் தெரியுண்டா. பரிச்சயின்னா எல்லாருக்கும் பயம்தான வரும்.நீ என்னமோ புதுசா சொல்லுற.உண்மையச்சொல்லு.வேறென்னமோ இருக்கு.”எனத் துருவினாள் தாய்.

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லயே!.என்னைக்கும் போலத்தான் இன்னைக்கும்இருக்கேன்
 ஏம்மா அப்படிக்கேக்குற?”என அசடு வழிந்தான்.
“டேய் தெரியுண்டா மவனே!சும்மா சொல்லு. கமாலாவப் பாத்தியாக்கும்.?”என அவளும் ஆமோதிப்பதுபோல் போட்டு வாங்கினாள்.

“அது......அது ......அது வந்து.........எனச் சொல்லை வழுக்கி இழுத்தவன அப்புறம் தயங்கியவனாய் “அதெல்லாம் இல்லயே......என்ன நீ சும்மா சும்மா நோண்டி நோண்டிகா கேள்வியாகா கேக்குறே.நாநாதாங் ஒண்ணும் இல்லேங்கிறல்ல.
அப்புறம் சும்மா சும்மா நொய் நொய்னுக்கிட்டு:”எனத் தாயிடம் உண்மையை மறைக்க முயன்றான்.

“இல்ல எங்கிட்ட எதையோ மறைக்கிற.நீ எத எங்கிட்ட மறைக்கனுமன்னு நினைக்கிறியோ அது எனக்கு புடிக்காத விசயம்ன்னு ஒளிக்கிற..........டேய் நீ வளர்றதப் பாத்துப் பாத்து பெருமைப் படுறேங்.ஆனா அதே நேரத்துல எனக்குப் பயமாவும் இருக்கு,உனக்கு அப்பா இல்லேங்கிற குறை தெரியக்கூடாதுன்னு செல்லமா வளத்துட்டேங். நாளக்கி யாரும் உன்னப்பாத்து “நீ என்னதாங் இருந்தாலும் பொம்பள வளத்த புள்ளதான............அறுதலி (தாலி அறுத்தவள்) வளத்த புள்ளதான.அதாங் அடங்காம அலையுறேன்னு ஊர்ல உள்ளவங்க கேவலமா பேசியிறக்  கூடாதேன்னு உன்னப் பொத்திபா பொத்தி வளக்குறேங்.ஏங் நெனப்புல மண்ணள்ளிப் போட்டுருவி யோன்னுதான் எனக்குப் பயமா இருக்கு.”எனத் தன் கண்களில் வழியும் கண்ணீரைத் தட்டித் துடைத்தாள்.

“அம்மா ஏம்மா அழுகுற.
அப்படியெல்லாம் உன்ன அசிங்கப்படுத்துற மாதிரி நடக்க மாட்டேம்மா.என்னய நம்பும்மா”எனத் தாயைத் தன்னிடம் தவறில்லை என்பதை நம்ப வைக்க முயற்சித்தான்.ஆனாலும் இவன் பொய் சொல்லவும் கற்றுக்கொண்டான் என்பதையும் புரிந்து கொண்டாள்.காதல் மலரும் போதே இயல்பாக பொய்யும் பூத்து விடும் என்பதும் இயற்கைதானே.தன் பிள்ளையின் வளர்சியைக் கண்டு மகிழும் பெற்றோர்க்கு கூடவே பயமும் சேர்ந்து வளர்வதும் இயற்கைதான்.
ஏனென்றால் எல்லாப் பெற்றோரும் தன் பிள்ளைகள் இச்சமுதாயத்தில் நல்லவர்களாகப் போற்றப்பட வேண்டும் ..அதைப்பார்த்துப் பெருமை அடைய வேண்டும் என்றுதானே கனவுகளோடு வாழ்கிறார்கள்.அதற்கு ராசாவின் தாயார் மட்டும் விதிவிலக்கா என்ன?அவள் தன் பிள்ளை இந்த வயதிலேயே காதல் வயப்பட்டு கல்வியில் கவனம் தவறி விடுவானோ என்ற அச்சம் அவளைப் பற்றிக்க் கொண்டது.அவனிடமிருந்து உண்மையை வரவழைக்க மீண்டும் மீண்டும் சில வினாக்களைத் தொடுக்கிறாள் 

“டேய் இங்க பாரு! இது பருத்தி மாறு புடுங்கிக் காச்சுப்போன கைகள்..ஊர்ல உள்ளவகெல்லாம் சொல்றாங்க "வயசு வந்த புள்ளய வீட்ல வச்சுக்கிட்டு நீ ஏங் இப்படிக்கஷ்டப்படனும்.
அவனப் படிக்க வச்சு என்ன பண்ணப்போற.இந்தக் காலத்துல படிச்சவங்களுக்கு எல்லாம் வேல கிடக்கிறதாக்கும்.பைத்தியக்காரி.அவன ஒரு வேலவெட்டிக்குகு அனுப்பாம இப்படி வீட்ல வச்சு அழகு பாக்குறய.இப்படி படிப்பு படிப்புன்னு படிக்க வக்கிறியே அவங் நாளக்கி உன்னயத் தெருவில சட்டிதான் எடுக்கவிடப் போறாங் பாருன்னு" எங்கிட்ட உன்னயப்பத்தி அவங்க அப்படிப் பேசும்போது அவங்ககிட்ட நாங் என்ன சொல்லுவேங் தெரியுமா.’அடி போங்கடி!பொறாம புடிச்சவளுகளா ஏம்புள்ளயப்பத்தி எனக்குத் தெரியும்முடி.உங்க புத்தி மதி ஒண்ணும் எனக்குத் தேவ இல்ல.நாங் கஷ்டப்படுறது போதாதா ஏம்புள்ளையும் இந்தக் கஷ்டத்த அனுபவிக்கனுமா?அவங் எனக்குக் கஞ்சி ஊத்துனாலும் சரி ஊதாட்டியும் சரி.அதப்பத்தி எனக்குக் கவல இல்ல. உழைக்க முடிஞ்ச வரைக்கும் உழப்பேங் முடியாட்டி ஏதாவது மாத்திறையப் போட்டு செத்துருவேண்டி”.ன்னு அவளுககிட்ட  விட்டுக் குடுக்காம வீர்ர்ப்பாப் பேசி உன்ன நம்பி இந்த உசுர உனக்காக சுமந்துக்கிட்டு இருக்கேண்டா ராசா !ஏங் நெனப்புல மண்ணள்ளிப் போட்டுராதய்யா எஞ்சாமி. எனக்குப் பயமா இருக்குய்யா.”என தன் மனத்தில் உள்ளதெல்லாம் கொட்டி அவளுடைய லட்சியம் கனவு எல்லாமே அவன்தான் என்பதைகா கூறித் தன் எண்ணங்களின் உணர்வுகளை கண்ணீர் வழிய வடித்துக் காட்டினாள்.

“அம்மா ஏம்மா நீ அழுகுற.நீ பயப்படுற மாதிரியெல்லாம் ஒண்ணும் ஆவாதும்மா .என்னைய நம்பும்மா.நாங் ஒம்புள்ளம்மா.நிச்சயமா ஒம்பேரக் காப்பாத்துவேம்மா.என்னைய நம்பும்மா....கமலா பழையபடி பள்ளிக்கூடம்வாராளாம்மா.
அவ ஒரு பொண்ணுங்கிறாதால்ல அவ படிப்புக் கெட்டுறக்கூடாதுல்ல.
அதனால அவா திரும்பவும் படிக்கப்போறாங்குற சந்தோசந்தாம்மா எனக்கு.
வேறொண்ணும் இல்லம்மா.
என்னைய நீ புரிஞ்சுக் கோம்மா””எனத் தன் அம்மாவை சமாதானப்படுத்தி நம்பிக்கையூட்டினான்.    

“அது நல்ல விசயன்தாங் கண்ணு.அவ பள்ளிக்கூடம் வந்தாலும் அவகிட்ட முன்ன மாதிரியெல்லாம் ரொம்பப் பழகக்கூடாது.என்ன! அவா ஒரு வயசுப்பொண்ணு.
மத்தவங்க கண்ணுக்குத் தப்பாத் தெரியாம ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும் தெரிஞ்சதா.போ பள்ளிக்கூடம் நேரமாச்சுல்ல பொறப்புடு.
மத்தியானச் சாப்பாடு கம்மந்தோச சுட்டு மொளகாத் தொவையல் அறைச்சி மூடி வச்சிருக்கேங்.சோறு வேணும்னாலும் அடுப்புல கவுத்தி வச்சிருக்கேங்.உனக்கு எதுவேணுமோ  சாப்புட்டுக்கோசாப்புட்டுட்டு ஏனத்தக் நல்லாக் கழுவி மூடி வச்சுரு.நாங் முதலாளி வீட்டுப் புஞ்சைக்கு மாறுபுடுங்கப் போறேங்.
பள்ளிக் கூடம் போகும்போது கதவால நல்லாச்சாத்திக்
கயிறு வச்சு நல்லா இறுக்கிக் கட்டிட்டுப்போ!ஏன்னா தொறந்து போட்டுப் போய்ட்டி யின்னா நாய் வந்து எல்லாத்தையும் தின்னுட்டுப் போயிரும்.பாத்துக்கோ!" என மக்கனுக்கு சொல்ல வேண்டிய தெல்லாம் சொல்லிவிட்டு வேக வேகமாக வேலைக்கு விரைந்தாள் அந்த அன்னை.

ராசாவும் மணமணக்கும் கம்மந்தோசை தொட்டுக் கொள்ள மொளகாத் தொவையல். நல்லா ருசிச்சு  சாப்பிட்டுவிட்டு பாத்திரங் களைக் கழுவிபா பத்திரமாக மூடி வைத்துவிட்டு வீட்டுக் கதவை கயிற்றால் இழுத்தே  இறுக்கிக் கட்டிவிட்டு தன் பைக்கூட்டைத் தூக்கிக் கொண்டுபள்ளிக்குக் கிளம்பினான்.  

வழக்கமாகப் பார்ப்பதுபோல் கமலா வீட்டு ஜன்னலைப் பார்க்கிறான். அவள் ஜன்னல் ஓரமாக நின்றுகொண்டு ராஜாவை ஏக்கமுடன் நோக்குகிறாள்.எல்லாவற்றையும் அவளும் கேட்டுவிட்டவளாய் தன் பார்வையில் கண்ணீர் ஒழுக விட்டுக் காட்டுகிறாள்.அம்மா சொன்னதெல்லாம் கேட்டுவிட்டாளோ என எண்ணி தன் தலையை தொங்க விடுகிறான்.அவன் மௌனம் ,”ஆமாம் அம்மா அப்படித்தான் சொன்னாள்.அவள் பெற்ற்வளாச்சே அவள் பிள்ளையைப்பற்றி அவளுக்குக் கவலை.அதனால் என்ன?அம்மாவை நான் சமாளிதுக்கொள்கிறேன்”என்பதுபோல் தன் ஆறுதலான பார்வையில் அவளுக்கு உணர்த்தினான்.

சரி விடு பெற்றவள் அவள் உன்னை விட்டுக் கொடுத்து விடுவாளா?கடவுள் விட்டபடி நடக்கட்டும்.பார்த்துக்கொள்ளலாம் என அவளும் தன்னையும் அவனையும் தேற்றும் விதத்தில் ஒழுகும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அவனிடம் பேசுவதற்கு ஆயத்தமான சைகையில் க்குக்கும் எனச்செறுமி உணர்த்தினாள்.அதையும் புரிந்து கொண்டு தன் நோக்கை மெதுவாக மேலே உயர்த்தி .என்ன சொல்லப்போகிறாய் எனும் சாடையில் ஆர்வத்தில் அவளைப்  பரிவோடு பார்க்கிறான்.

மெதுவான தளதளத்த குரலில் “ராசா!எனும் அழைப்பிலேயே அவளையும் மீறி கண்கள் சொரிகிறது.அவளை அதற்குமேல் நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம் என்பதுபோல் .நீ ஒண்ணும் கவலைப்படாதே எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன் எனும் விதத்தில் மௌனத்தில் தன் தலை அசைத்து மறுமொழி செய்து தன் கைகளைக் காட்டி நான் வருகிறேன் எனச் சொல்வதுபோல் அவளைப் பார்த்துக் கொண்டே நகர்கிறான்.

ஆனாலும் கமலா ,ராசா! நாங் சொன்னது ஞாபகம் இருக்குல்ல சார்ட்டச் சொல்லி எப்படியாவது எங்க அப்பாட்ட வந்து பேசச்சொல்லு.நாங் இந்த சிறைச்சாலையை விட்டு எப்படியாவது வெளியில வரணும்.அதுக்கு நீதாங் உதவனும் எனக் கூறி தன் கைகளைக்கூப்பி வணங்கி கண்ணீரால் விடையளித்தாள். உதிர்த்தக் கண்ணீருடன் ஓரம் ஒதுங்கி மௌனமாக அழுதாள்.

.அப்போது அவன் நெஞ்சே கசங்கி விட்டதுபோல் வலியை `அடக்கிப்பார்த்தும் அடக்க முடியாதவனாய் கதறி ஓசை வெளியில் வராதபடிக்குதன் வாயைப்பொத்திக் கொள்கிறான்.பின் சமாளித்துக்கொண்டு தன் வழியும் விழிகளைத் துடைத்து மேலும் அவள் சோக முகத்தைக் காணத் துணிவில்லாதவனாய் தன் முகத்தைத் தாழ்த்திக்கொண்டு வேகமாக் நடந்தான். தொடர்ந்து தன் கண்களில் உதிர்த்தும் துடைத்தும் கொண்டும்......

(தொடரும்}
கொ.பெ.பி.அய்யா.

Thursday, 20 February 2014

கரிசல் காவியம்12

கரிசல் மண்ணில் ஓர் காவியம்...12
அத்தியாயம்—12
கமலாவுக்குள் பாரதி குடியேறிவிட்டான்.அவளுடைய நம்பிக்கை,தெளிவு,தீர்வு,அறிவு,பலம் என அத்தனை சக்திகளும் பன்மடங்காய் பெருகி அவள் ஒரு மகா சக்தியாக உருவெடுத்தாள்.இனி என்னுடைய எதிர் காலத்தை நான்தான் தீர்மானிப்பேன். எனக்கும் அறிவு இருக்கிறது.என்னுடைய உரிமைகளைத் தடுக்க எவருக்கும் அதிகாரம் இல்லை.நான் எதை அடைய வேண்டுமென முடிவெடுக்கிறேன் என்பது என்னுடையது.என எண்ணியவாறு சட்டென்று எழுந்தவள் அடைத்து வைக்கப்பட்ட ஜன்னல் கதவுகளைத் திறந்தாள்.வெளி உலக வெளிச்சம் அவள் கண்களில் பிரகாசித்தது.இருண்டு கிடந்த உள்ளறையில் ஒளி பரவி அவளுடைய உருவத்தை ஜன்னல் கம்பிகளைத் தாண்டி சுவாசிக்கச் செய்தது.
கைகள் கட்டப்பட்டு அடங்கிக்கிடப்பது போன்ற நிலை மாறி இதுவரை இல்லாத ஒரு புது உத்வேகம் அவளுக்குள் ஏற்பட்டது.அது அவளுக்கு அதிசயமாகவும் தைரியம் சொல்லும் ஊக்கமாகவும்  இருந்தது.ஜன்னலுக்கு வெளியே தேடிய கண்கள் ~எங்கே ராஜாவைக்காணோம்~ என அங்கும் இங்கும் எட்டி எட்டித் தேடின.வழக்கம்போல் ஒரு பாட்டு ஒண்ணு பாடுவாளே.அதை அன்றும் பாடுகிறாள்.
கண்ணா கருமை நிறக் கண்ணா .....உனைக்காணாத கண்ணில்லையே.”அப்போது அவன் வீட்டுக் கொல்லைப்புறத்தில் உள்ள ஒரு மா மரத்தின் கிளையில் படுத்து தன் சிந்தனையில் என்றோ ஒருநாள் பள்ளியில் நிகழ்ந்த நிகழ்வு ஒன்றினை எண்ணி தனக்குள் அசை போட்டுக்கொண்டிருந்தான்.
பள்ளிக்கு ஒரு நாள் செல்லும்போது  இலேசாக பின் புறத்தில் கிழிந்திருந்த சின்ன ஓட்டையுள்ள தனது கால்ச்சட்டையை அணிந்து சென்றிருந்தான்.தேடிப்பார்த்தும் அன்று அவனுக்குக் கிடைத்த டவுசர் அதுதான்.வறுமையின் அடையாளமும் அதுதான்.அதைக்கண்ட சக மாணவர்கள் அவனைப்பார்த்துக் கேலி செய்தனர்.`ஓட்டைக் குண்டிப் பயடா இவன் “ என நக்கலாக அவனைப்பார்த்துச் சிரித்தனர்.அந்தக் குறும்புக்கார மாணவர்களில் ஒருவன் அந்தக்கிழிந்த ஓட்டையில் விரலைவிட்டு இழுத்து ஓட்டையைப் பெருசாக்கிவிட்டான்.
வீட்டில் மாற்றிக்கொள்வதற்கு வேறு சட்டையும் இல்லை.பின்னால் டவுசரை திரும்பிப்பார்த்தான்.ஓட்டை பெரிதாகி கிழிந்து தொங்கியது.ராஜாவுக்குக் கோபம் வந்துவிட்டது “டேய் ஏண்டா என்டவுசரக் கிழிச்ச” என சற்று ஓங்கிய குரலில் கேட்டான்.அதற்கு அந்த மாணவன் “அப்படிதாண்டா கிழிப்பேன்.நீ ஓட்டக்குண்டியா வந்தா கிழிக்காமலா இருப்போம்”என ராஜாவின் எரிச்சலை தூண்டும் விதமாகவே பேசினான்.இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த கமலா வேகமாக வந்து “பாவண்டா ராஜா.அவங்க ரொம்ப ஏழடா.வேற சட்ட இருந்தா போட்டுக்கிட்டு வரமாட்டானா?ஏண்டா இப்படிச்செஞ்சே”என இரக்கப்பட்ட குரலில் கேட்டாள்”
நீ என்ன அவனுக்கு சப்போட்டா?இது அவனுக்கு எனக்கும் உள்ள பிரச்சன எடையில நீ எதுக்கு வாற".என பேசிக்கொண்டே அவளைத் தள்ளிவிட்டான் அந்த சேட்டைக்கார சிறுவன்.அதைக்கண்ட ராஜாவிற்கு வேகம் பொத்துக் கொண்டுகிளம்பியது.
அதுவரை பேச்சாகப் பொறுமையிலேயே பேசிக்க்கொண்டிருந்தவன் அதிரடியாக அந்த வம்புக்காரனின் சட்டையை எட்டிப்பிடித்தான் ‘டேய் ”சண்டைக்கு வாறதா இருந்தா எங்கூட வாடா கமலாவ ஏண்டா தள்ளிவிட்ட.”என ”அவனைப் பிடித்து இவன்தள்ளினான்.
இப்படியே சண்டை வளர்வதைக்கண்ட கமலா அழுதுகொண்டே சென்று ஆசிரியரிடம் முறையிட்டாள்`ஆசிரியர் அந்த சிறுவனைக் கண்டித்து முட்டி போடச்சொன்னார்.அன்று இந்த ராஜாவுக்காக அந்தப் பயலிடம்  எம்புட்டுக் கோபபட்டாள் என்பதை அவள் இவன் மீது வைத்திருந்த அன்பாக எண்ணி எண்ணிப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தான்.அந்த வேளையில் இந்த பாட்டும் அவனிடம் போயச் சேர்ந்தது.
படீரெனத் துள்ளி எழுந்தான்.அவன் படுத்திருந்தது ஒரு சிறு மரக்கிளை என்பதையும் மறந்தான்.பாவம் சம நிலை சமாளிக்க முடியாமல் பொத்தெனக் கீழே விழுந்தான்.மரக்கிளையின் குச்சி ஒன்று குத்தி இலேசான சிராய்ப்பு.ரத்தம் எட்டிப்பார்த்தது.ஆனாலும் அதை அவன் கண்டுக் கொள்ளவில்லை.ஜன்னல் பக்கமாக ஓடினான்.இவன் ஓட ஓட பாட்டும் இவனை வாடா வாடா என அவ்வசரப்படுத்துவதுபோல் இருந்தது,தவித்து இளைத்து ஜன்னலைக் கண்டு நின்றான்.அவள் இவனைக்கண்டதும் இன்னும் பாட்டின் விசையைக்கூட்டி உன்னைத் தேடித்தானடா இந்தப்பாட்டு என்பதுபோல் அழுத்திப் பாடினாள்.பார்த்த பின்னும் பாட்டு நிற்கவில்லை.மகுடி கண்டு மயங்கிய நாகத்தைப்போல் தன்னை மறந்தவனாய் இது நிசந்தானா என்பதுபோல் வியந்தவனாய் உடம்பெல்லாம் வியர்த்துக்கொட்ட சிலையாகி நின்றான்.
அப்போதும் அவள் பாடிக்கொண்டுதான் தொடர்கிறாள்.பேச்சை அவன் ஆரம்பிக்கிறானா என கால அவகாசம் கொடுக்கிறாளா?இல்லை பரிட்சிக்கிறாளா?அவள் இதழ்கள் பாட்டை வாசித்தாலும் அவள் இதயம் அவளுக்குள் அழுகிறது.அதை அவள் கண்கள் கண்ணீரால் சொல்கிறது.பாடிக்கொண்டே அவனைப்பார்க்கிறாள்.
இத்தனை நாளும் நானும் உன்னைத் தேடாம லில்லை.என்பதைக்
கூறுவதுபோல் தன் விழிகள் உதிர்க்கும் துளிகளை தன் முந்தானையால் துடைக்கிறாள்.என்னை நீயும் நினைத்தாயா என விசாரிப்பது போன்று பாட்டை நிறுத்திவிட்டு இமை தட்டாது அவள் அவனை நோக்கும்போது அவள் கண்கள் நீருக்குள் மீன்களாய் நீந்துகின்றன.அம்மீன்கள் துள்ளும்போது சிதறும் நீர்த் திவளைகளாய் அவள் தன் சுட்டு விரல்களால் சுண்டிவிடும் கண்ணீர்த் துளிகள் இவன் மீது படுகின்றன.பிரிந்தவர் கூடினால் பேசவும் கூடுமோ என்பதுபோல் இருவரும் கண்களாலேயே நலம் விசாரித்துக்கொண்டு அசையா ஓவியம் போல் பேச வார்த்தைகளை மௌனமாக தங்கள் சிந்தையில் தேடுகிறார்கள்.இப்போது யார் முதலில் தொடர்வது.
அந்த வகையில் ஆண்கள் பொறுமையை இழந்தவர்கள்தான்.அதுதானே ஆண்மை.பெண்கள் இந்தவகையில் முந்துவதும் அவ்வளவாக ரசனை இருக்காது,அதனாலும் பெண் புத்தி பின் புத்தி என்பரோ!ஆனாலும் அதுதானே பெண்மையின் அழகும் தனிச்சிறபபும்.பெண்மை என்பதே மென்மை தானே.
அதனால் இப்படிப்பட்ட சிக்கலான தருணங்களில் அவர்களுக்கு அழுதுவிடுவதே மிகவும் எளிமையாகி‌ விடுகிறது.

'கமலா.............................................'~!என சொல்லும் போது அவன் உதடுகள் துடிக்கின்றன கண்கள் கலங்குகின்றன.அவனையும் மீறி அழுகின்றன.வார்த்தைகள் வரிசையில் வரத் தடுமாற்றம் அடைகின்றன.இருந்தாலும் இழுத்து வந்து நிறுத்தப் போராடுகின்றான்.சொற்கள் கோர்வைக்குள் வரத் தயங்கி தனித் தனியே ஒவ்வொன்றாக இடைவெளி விட்டுச் சேர்ந்து வரச்சிரமப்படுகின்றன.
ஆனாலும் சமாளிக்கிறான்.
மீண்டும் ஆரம்பிக்கிறான் கமலா.......!ஏம்மேலே உனக்குக் கோபமா?அன்னைக்கு ஆச்சி...........என இழுத்து மேலும் தொடர்வதற்கு சிரமப்பட்டு அழுகிறான்.இப்பொழுது கமலா வாய் திறக்கிறாள்..
‘‘எல்லாம் எனக்குத் தெரியும்.அன்னிக்கு ஆச்சி மேலத்தான் தப்பு.எங்க அப்பா கூட ஆச்சியத்தான் திட்டுனாரு.ஆச்சி அப்படித்தான்.பாவம்!நீயும் உங்க அம்மாவும்........சரி...சரி...அழாதே.........அதான்....நாங் இப்போ பேசிட்டேங்ல்ல.அப்பொறம்
என்ன? டேய் ராஜா நீ எனக்கு ஒரு உதவி செய்வீயா?
“உதவியா......என்ன செயனும்?சொல்லு சொல்லு!:."எங்க அம்மாகூட உங்கூடப் பேசுறது தப்புண்ணுதாங் திட்டுறா.நீ என்னமோ வயசுக்கு வந்துட்டயாமே.வயசுக்கு வந்த பொண்ணுங்கிட்ட ஆம்பளப் பசங்க பேசுனாதப்பாமே!"
எனக் கிறுக்குத்தனமாக உளறினான் ராஜா.
சீ...ப்....போடா மடையா......இனிமே நாம யாருக்கும் பயப்பட வேண்டியதேஇல்ல......
ஆமாண்டா நானும் பள்ளிக்கூடம் வர்ப்போறேங்.....+2 பரிச்ச வருதுல்ல,.......படிக்கனும்ல்ல..என சகசமாகவே கமலா கூறினாள்`
அப்போ பள்ளிக்கூடம் வருவியா?நிசமாவா?........எனச்சந்தோஷதில் ஆச்சர்யப்பட்டான் ராஜா.  
ஹூம்....... அதனாலதான் நீ எனக்கு ஒரு உதவி செய்ணும்.
நாங் என்ன கமலா செய்ணும்.'
“ஆமா ....நம்ம சாரட்ட சொல்லி எங்க அப்பாட்ட பேசச்சொல்லனும்.சார் சொன்னா எங்க அப்பா கேப்பாரு.”
‘கேப்பாரா’``````````````/?என வடிவேல் குரலில் பேசினான் ராஜா.
இப்போது கமலா கல கல வென சிரித்தாள்`கமலா சிரித்ததும்ராஜாவும் சிரித்தான். சோகம் மாறியது.
சுந்தரம் தொடர்கிறது.
(தொடரும்)

கொ.பெ,பி.அய்யா.

Monday, 17 February 2014

கரிசல் காவியம்4

கரிசல் மண்ணில் ஒரு காவியம்.4
அத்தியாயம் 4
காதல் அறியாத வயது.ஆனாலும் அவள் மீது எனக்கொரு ஈர்ப்பு.அதை குழந்தைத்தனமான அறிவற்ற மோகனம் என்றுகூடச் சொல்லலாம்.என் சோட்டுப் பசங்களிடம் நான் கொண்டிராத ஒரு விதமான தோழமைப்பற்றை அவளிடம் நான் கொண்டாடினேன் 
என்பது மட்டும் என் நினைவில் நிற்கிறது.பால் வேற்றுமை எங்களுக்குள் ஆரம்ப காலப் பழக்கத்தில் இல்லை .ஆனால் உணர்வில் ஒளிந்திருந்ததோ என்னவோ தெரியவில்லை.
அப்பருவத்தில் அது தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளவில்லை.
காலப்போக்கில் அறிவும் அனுபவமும் வளர வளர அதுவே எங்களுக்குள் இயல்பாகவே காதலாக துளிர்விட ஆரம்பித்ததோ என்னவோ எனக்குப் புரியவில்லை.
பிஞ்சாக இருக்கும்போது தொடங்கிய அந்த நட்பு.பருவம் வளர வளர பால் வேற்றுமை புரியத் தொடங்கி காதலாக கருத்தியல் மாற்றம் ஆகியிருக்கலாம்.ஆனால் அப்போததை என்னால் காதலாக உணரத் தெரியவில்லை. குழந்தைத் தனத்தில்  இயல்பாகத் தோன்றிய அந்த ஈர்ப்பு  பால்வேற்றுமை புரியும்போது காதலாகக் கனிந்தது பருவ முதிர்ச்சியாகத்தானே இருக்கும்!
குழந்தைகளாக பழகியபோது அஞ்சாமல் ஆடிய ஆட்டமும் பாட்டமும் வாலிபமாக மாற மாற பருவம் முதிர்ந்து முற்றியபோது அஞ்சி ஒளிந்து கொள்ளமுயன்றது.
அந்த அச்சம்தான் நட்பைக் காதலாக மலரத் தூண்டியது.
பொதுவாக ஒன்றின் ஓட்டம் இயல்பபாக தன்போக்கில் தொடரும்போது அதன் திசையும் விசையும் மாறுவதில்லை.அது தடைகளை சந்திக்கும் போதுதான் அது வினை மாற்றம் அடைகின்றது.அதன் வலிமையும் கூடுகின்றது.அவ்வாறுதான் ஆண் பெண் இருபாலருக்கும் இடையே ஏற்படும் நட்பும். அது தன் நடப்பில் நட்பாக தொடரும் வரை சலனமின்றித்தான் போய்க்கொண்டிருக்கும்.
அதற்குத் தடைகளும் இடர்களும் கட்டுப்பாடுகளும் ஏற்படும் போதுதான் அது தன் நட்பு எனும் காய் நிலையிலிருந்து காதல் எனும் கனி நிலைக்கு முதிரத்.துடிக்கிறது.எவ்வாறு ஒரு கூட்டுப்புழு தன் கூட்டுக்குள்ளே வளர்ந்து முற்றியபோது கூட்டைக் கிழித்துக்கொண்டு அழகிய வண்ணங்களையுடைய சிங்காரச்சிறகுகளால் வண்ணத்துப் பூச்சியாக பறக்க முயல்கிறதோ அதுபோலத்தான் காதலும் தன் தடைகளைத்தாண்டி வெளிப்படுகிறது.
கமலாவின் பருவத்தோடு காவலும் வளர்ந்தது.காவலின் பலம் அதிகமாக அதிகமாக எங்களின் காதலும் வலிமை கூடிக் காவலையும் மீறத் துடித்தது.ஆச்சி எங்களை கவனிக்கும் வேலையையே பிரதானமாகக் கொண்டிருந்தாள்.என் நிழல் கூட அவள் வீட்டு முற்றத்தில் விழக்கூடாது என்பதில் கவனமாக இருந்து காவல் காத்து வந்தாள்.பொல்லாத ஆச்சி அவள் பகல் பொழுதெல்லாம் வீட்டு வாசல்படியில்தான் உடாகார்ந்துக்கிட்டு பக்கத்து வீட்டுக்கிழவியையும் பேச்சுத்துணைக்குக் கூட்டி வைத்துக்கொண்டு வெற்றிலையை சுவைதுத்க்கொண்டு பேசிக்கொண்டே இருப்பாள்.நான் ஏதாவது சாக்குச்சொல்லி வீட்டுக்குள் நுழையலாம் என்று முயற்ச்சிப்பேன்.ஆனால் ஆச்சியின் அந்த பலமான காவலைத் தாண்டி என்னால் நுழைய முடியாதபடி வாசலை முழுமையாக அடைத்துக்கொள்வாள்.
ஆச்சி வருடம் தவறாமல் ஏகாதேசிக்கு விழித்திருப்பது வழக்கம்.என்னைத்தான் மகா பாரதம் வாசிக்கக் கூப்பிடுவாள்.இந்த வருடம் என்னைக்கூப்பிடவில்லை.
நானும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக்கொள்ள மறக்கவில்லை.வழக்கம்போல் ஆச்சி வாசலில்தான் உக்காந்திருந்தாள்.நானும் அலையாத விருந்தாளியைப்போல் வலியக்கட்டி போய் நின்றேன். .என்னை உக்காரென்று ஒரு பேச்சுக்குக் கூட சொல்ல வில்லை. சொல்லாட்டி என்ன நானே சப்புன்னு உக்காந்து
“என்ன ஆச்சி இன்னிக்கு ஏகாதேசி.மகாபாரதம் படிக்கலாமா?எப்போ ஆரம்பிக்கலாம்?நாங் குளிச்சிக்கிளிச்சி ரெடியா வந்துட்டேன்''என்று சொல்லி நானும் வாசல் படியில் உக்காந்துக்கிட்டு ஆச்சியோட பேச ஆர்ம்பிச்சுட்டேன்.
ஆச்சி விடுவாளா என்ன!”இல்ல இன்னிக்கு கமலாவே படிப்பா” எனச் சொல்லி என்னைத் தட்டிக்தழிக்க திட்டமிட்டாள் ஆச்சி. அதேவேளை உள்ளிருந்து கமலாவின் கண்சிமிட்டுவது போன்று ஆலங்கமுடன் குரல்.
""ஆச்சி இன்னிக்கு எனக்கு கத படிக்கத் தோதில்ல.அவனே படிக்கட்டும்”
எனக் கமலாவே எனக்கு வாய்ப்பத்து எனது இருப்பை அவள் மறைமுகமாக ஆதரித்த அந்த சரியான தருணத்தைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டு
“என்ன ஆச்சி வருசமெல்லாம் நாந்தான படிக்கிறேன்.பாவம் கமலா அது என்னைக்கிப் படிச்சிச்சி.இதோ புஸ்தகம் கொண்டுட்டே வந்துட்டேங் ஆச்சி “ன்னு சொல்லிக்கிட்டே கதய படிக்க ஆரம்பிச்சிட்டேங்.   
கொ.பெ.பி.அய்யா.

     



Monday, 10 February 2014

கரிசல் காவியம்10

கரிசல் மண்ணில் ஒரு காவியம் 1௦
அத்தியாயம் 1௦
பாவம் பால்வினை புரியாதவன்.

ராசாவின் தாயார்: ஒரு உறவு தொலைந்தால் அது மீண்டும் கிடைக்கும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை என்ற உண்மையை அவள் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தாள்.

அக்கம் பக்கம் உறவுகள் அவசியம் என்பதையும் புரிந்து வைத்திருந்தாள்.நேற்றுவரை தாயாய்ப் பிள்ளையாய் பழகிவிட்டு இன்று ஒருவற்கு ஒருவர் பகையாளிகளாய் ஒருவர் முகம் ஒருவர் பார்க்கக் கூச்சப்படும் நிலை எவ்வளவு மோசமானது.அதனால் மனதுக்குள் ஏற்படும் வலி என்ன என்பதையும் அவள் உணர்ந்திருந்தாள்.
இப்படியொரு நேரக்கூடாத நிகழ்வு எப்படி நேர்ந்தது என்பதற்கான காரணம் தேட ஆரம்பித்தாள்.

மகனைப் பார்க்கிறாள்.
அவனும் ஒரு பக்கம் வாடி வதங்கி இழக்கக்கூடாத ஒன்றை இழந்துவிட்டதுபோல் இடிந்து போய் சோகமே சொந்தமெனஉட்கார்ந்
திருந்தான்.

மெதுவாகத் தாய் அவன்பக்கம் நகர்கிறாள்.அவனுடைய சோர்ந்து போன முகத்தைப் பார்க்கிறாள்.தாயின் பார்வை அவனுக்குப்புரிகிறது,
அம்மாவைப் போலவே அவனும் தான் உணர்ந்து
கொள்ள அவனுடைய கண்கள் அவளிடம் விடை தேடி அழுகிறது.
அப்படியே அவனைப் பெற்றவள் அவனுக்கு ஆறுதலாக அவனைத் தன் மார்போடு அள்ளி அணைத்துக்கொண்டு நடந்தது என்ன என்பதை விசாரிக்கத் தொடங்குகிறாள்
“ டேய் ராசாக்கண்ணு என்னடா இதெல்லாம் ஏண்டா இப்படி.அவர்கள் மிகவும் நல்லவர்கள்தானே!இவ்வளவு கோபம் வரும்படி என்னடா நடந்தது.இதற்குமுன் அவர்கள் யாரும் இப்படி நடந்து கொண்டது இல்லையடா .அவர்கள் நம்மை விட உசந்தவர்கள்தான்.ஆனாலும் அவர்கள் அதைக் காட்டிக்கொண்டது இல்லையடா.அவர்களுக்கும் நமக்கும் பகை ஏற்பட வேறு எந்தக் காரணமும் இல்லையடா.சொந்தக்காரங்க கூட நம்மீது அவர்களைப்போல் உதவியாகவும் துணையாகவும் இருந்ததுஇல்லையடா.

இவ்வளவு பிரச்சனை ஏற்பட என்னடா ஆச்சு?ஏண்டா இப்படி?நீ ஏதாவது தப்பா நடந்துக்கிட்டியாய்யா?சொல்லுயா!” எனக் கவலை தோய்ந்த குரலில் கண்ணீர் மல்கக் கேட்டாள்,இதைக் கேட்ட ராசா என்ன பதில் சொல்வான் பாவம்!அவன் தன்தாயைக்கட்டி அணைதுக்கொண்டுக் கதறினான்.
”அம்மா!நான் எந்தத் தப்பும் செய்யலியே!அந்த ஆச்சிதான் முன்னைப்போல இல்லம்மா!இப்பொழுதெல்லாம் அந்த ஆச்சி என்னைவீட்டிற் குள்ளேயேசேர்ப்பதில்லை.
என்னை ஏதோ ஒரு வேண்டாதவனைப்போல் வெறுக்கிறாள்.அது ஏன்னுதான் எனக்குப் புரியலம்மா!”என உலகம் புரியாதவனாய்ப் பதிலுரைத்தான்.
“டேய் கண்ணா நாந்தாங் அன்னிக்கே வடசொன்னேல்ல.
கமலா வயசுக்குவந்துட்டா.
இனிமே அவங்க வீட்டுக்கு முன்ன மாதிரி அடிக்கடி போகக்கூடாது அப்படின்னு சொன்னேல்ல.அப்புறம் ஏண்டா நீ அங்க போன .அப்பத் தப்பு உம்மேலத்தான்.அதான் ஆச்சிக்கு வேற வழி தெரியாம சண்டய இழுத்துருக்கா.
ஏண்டா சட்ட இப்படிப்பண்ணுன.
டேய் யாரைப் பகைச்சிக் கிட்டாலும் பக்கத்து வீட்டுக் காரங்களப் பகைக்கக்
கூடாதுடா!

அப்படிப் பகைச்சிக்கிட்டா அப்புறம் கால் பட்டாலும் குத்தம் கை பட்டாலும் குத்தமுன்னுஎதுக்கெடுத்
தாலும் சண்ட வந்துக்கிட்டே இருக்கும்டா!அம்மா சொன்னாப் புரிஞ்சுக்
குனுமுடா!இப்பப் பாத்தியா எவ்வளவு பெரிய சண்ட.நீ அவ்வளவு பெரிய கல்லத் தூக்கிப்போட்டியே அது அந்த ஆச்சி மேல விழுந்திருந்தா பாவம் அந்தக் கிழவி செத்துருக்குமடா! அந்தக் கிழவிக்கு ஏதாவது ஒண்ணு ஆயிருந்தா அப்புறம் ஒங்கதி என்னடா!கொஞ்சமாச்சும் நீ யோசிசசுப் பாத்தியா!

முட்டாப்பயல நீ படிச்சவன்தான இப்படிபண்ணலாமா?இதுக்குத்தானா நாங் இவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வக்கிறேன்.”என ஆழ்ந்த கவலையோடு அழுத கண்ணீரோடு ஆதங்கச்சொற்களை உதிர்த்தாள் அவன் தாயார்.

அந்த ஆச்சி மட்டும் அப்படிப் பேசலாமா?உன்னயப்பத்த்தித் தப்புத் தப்பா அவ பேசினா என்னால பொறுத்துக்க முடியுமா?அதாங் எனக்குக் கோவம் வந்துருச்சு.ஆத்திரம் தாங்கல.அவசரப்பட்டுட்டேங்.
அப்பக்கூட அந்தக் கல்ல அவ மேல போடணுமுன்னு போடல.கல்ல எடுக்கும்போது வேகமாத்தாங் எடுத்த்தேங். ஆனா போடணுமுன்னு நினைக்கும்போது பயம் வந்துருச்சு.எடுத்த கல்ல எப்படியும் கீழ போட்டுத்தான ஆகணும் போட்டுட்டேங்.கீழ விழுந்த கல்லு எப்படியோ உருண்டு கிழவி காலுல பட்ட்ருச்சு..அவ்வளவுதாங்.
நாங் போடணுமுன்னு நினைச்சுப் போட்டிருந்தா அந்தக் கிழவி அப்பவே செத்துப் பொணமா ஆயிருக்காது.என குழந்தைத்தனமான பதிலை சொன்னான்.
“வாய மூடுறா மடயா!செய்யுறதையும் செஞ்சுப்புட்டு வியாக்யாணாமா பேசுற வியாக்யாணம்.இன்னிக்கு இவ்வளவு தூரம் ஆயிப்போச்சே இன்னும் எப்படிறா அவங்க கூட முகம் குடுத்துப் பேசுறது.டேய் நாங் ஒண்ணு கேக்குறேங் நீ மறைக்காமச் வளசொல்லணும்.
அந்தப் புள்ளயிட்டப் போயி அது இதுண்ணு ஏதாவது தப்புத்தண்டாப் பேசினயா?சொல்லுடா!”என நளினமாக விசாரிக்கத் தொடங்கினாள்.
“ஏம்மா அவட்ட இன்னிக்குன்னு நாங் புதுசாவா பேசுறேங்.
நாங்க சின்னப் புள்ளையில இருந்தே அப்படிதானம்மா பழகுறோம்.இப்பமட்டும் அது ஏங் தப்பாப்போச்சு.?என விவரம் புரியாமல் கேட்டான்.
“அய்யோ உனக்கு எப்படிச்சொல்லிப் புரிய வக்கிறதுன்னு தெரியலயே!இப்படி வாழ மட்டையா இருக்கயே!டேய் அவ அப்போ சின்னப்பொண்ணு இப்ப அவ பெரிய மனிசி ஆயிட்டா. அதனால ஆம்பளப் பயக கூட அவ பேசக்கூடாது.அப்படி பேசினா அது தப்பு.அவளஒரு மாப்பள பாத்துக் கட்டிக் குடுக்குற வரைக்கும் அப்படித்தாங் அவள பாதுகாப்பா வச்சுருப்பாங்க புரிஞ்சுக்கோடா.””எனப் புத்திமதி சொன்னாள்.
போம்மா அவளுக்கும் எனக்கும் ஒரே வயசுதான அப்புறம் அவ மட்டும் என்னயவிட எப்படிப் பெரிய மனிசியா ஆயிட்டா?.”என விளங்கிக்கொள்ள முடியாத வயதில் விவரம் இல்லாமல் கேட்டான்.
“அடப்பாவிப் பயலே!சரி!நீ ஆச்சி மேல எதுக்குக் கல்லத்தூக்கிபோட்ட!”
“அவ உன்னத் தப்புத் தப்பாப் பேசினா அதாங் போட்டேங்”
“அது மட்டும் தப்புண்ணு தெரியுதுல்ல`இதுவும் அப்படிதாண்டா தப்பு.நீ கமலாவோட பேசிப் பழகிக்கிட்டு இருந்தா நாளைக்கு அவளயும் இப்படித் தப்பாத்தாண்டா பேசும் .
இந்த ஊரு என விளக்கம் கூறிக்கொண்டே கதறினாள் அந்த உலகம் அறிந்த தாய்.
(தொடரும்)


    கொ.பெ.பிச்சையா..

Wednesday, 5 February 2014

ஊருக்கு ஒரு சகுனி.

ஊருக்கு ஒரு சகுனி.!

ஊருக்குப் பெரியவர்,உத்தம புருசர்,நாட்டாமைஅறக்கட்டளை தர்மகர்த்தா;
அத்தனைக்கும் பொறுப்பானவர்-அனைத்துக்கும் தகுதியானவர்தான.
நல்லவரைக் கண்டாலே வில்லனுக்குப் பிடிக்காதே.ஊரைக் கெடுக்கத்தான்
ஒருவன் இருப்பானே.

எவரும் நல்லவர் என்று பேரெடுத்தாலே அவனுக்கு ஆகாதே.

இவரை எப்படிக் கவிழ்க்கலாம் எனப் பலவாறாகப் பல வருடங்ககளாகவே
யோசித்தான்.

பழக்கமென்றால் பழக்கம்........அப்படி ஒரு பழக்கம். அவன் பேச்சோ!
அப்பப்பா !........................!திருநெல்வேலி அல்வாக்கூட அப்படி இனிக்காது.

இனிக்க இனிக்கப் பேசியே எப்பேர் பெற்றவரையும் கவிழ்த்து விடுவான்.
அப்படி ஒரு கில்லாடித்தனம்.அவனுக்கு.

ஒரு நாள்..............அது சித்திரை மாதம் அக்கினி நட்சத்திர வெய்யில்
நெருப்பை அள்ளிக் கொட்டிக் கொண்டிருந்தது.பாவம் ஊர் நாட்டாமை .........
வெப்பம் தாள முடியாமல் வியர்த்து ஊற்றிட ஆலமர நிழலில் வந்து
அப்பாட ...............ன்னு ஆயாசத்துடன் அமர்ந்தார்.

வந்தான் அந்த சகுனி."அட்டட்டா எப்படி வேரக்கிறது பார்த்தீரா
அப்பப்பா என்ன வெயில்!--இந்தக் குளிர்பானத்தைக் குடியும்.ஆயாசம் நீங்கி தெளிச்சியா ஆயிருவீர்"
எனஅக்கறையோடு வக்கனையாகக் கொடுத்தான் .

அவரும் இவனை நம்பிக் கட கட வென அன்னாக்கஊற்றிக்குடித்து
விட்டுச் சொன்னார்,
"ஆகா இப்படி ஒரு பானத்தை......நான் இதுவரைக் குடிச்சது இல்லையே.
ருசி......... இது ஒரு மாதிரி இருக்கே..........
தூக்கம் வார மாதிரி கண்ண அசத்துதே...........கொஞ்சம் தலையசாச்சுக்கிடட்டுமா?"
எனத் தடு மாறிய குரலில் அவனிடம் அனுமதி கேட்டார்..

அதற்கு அவன்;"அய்யய்யோ உடனே உறங்கக் கூடாது.இதக் கொஞ்சம் சாப்பிட்டுப் பாருங்க,அப்புறம் பாருங்க எப்படி இந்த உலகம் சுத்துமுன்னு." 

எனக் கூறிக் கொண்டே வறுத்த கருவாடு ஒன்றை அவர் வாயிலே திணித்தான்.சுத்த சைவமான அவரை இந்தப் பாவி அந்த நிமிடமே அசைவமாக மாற்றிவிட்டான்.அந்த அளவிற்கு அவருடைய புத்தியை எது கெடுத்தது.அவருக்கு எதை ஊற்றிக்கொடுத்து கெடுத்தான்.பாவம்!போதை என்றால் என்னவென்றே அறியாத அவரை குளிர்பானம் என ஏமாற்றி 
சாராயத்தில் கலர் பானம் ஒன்றைக் கலந்து கொடுத்துவிட்டான்.
இப்போது உள்ள நிலையில் அவரைச்சுற்றி என்ன நிகழ்கிறது என்றே 
அவருக்குப் புரியாத அளவிற்கு அவருடைய அறிவு மயங்கி இருந்தது.
அந்தச்சண்டாளன் கட்டளைப்படி இயங்க வேண்டிய கட்டாயத்தில் சிக்கிக் கொண்டார்.சேரக்கூடாதவரோடு சேர்ந்தால் இதுதான் கதி.இதை விதி எனக் கூறி விளக்கம் கூறினால் சமூகம் ஒப்புக்கொள்ளது.

குடி குடியைக் கெடுக்கும் என்பதும் உண்மைதானே!
   


"சரி இப்போது வீட்டுக்குப் போகலாமா" எனக் கேட்டு ஒரு சிரிப்பு சிரித்தான்.அந்த சிரிப்புக்கு எத்தனையோ அர்த்தங்கள்.
நீயா இந்த ஊருக்குப் பெரிய மனிதன்.உன்னைப் பார்த்தால் நான் கையெடுத்துக் கும்பிட வேண்டுமா?இப்பப் பாரு ஊரே உன்னைக் கை கொட்டிச்சிரிக்க வைக்கிறேன்"என மனதில் விசத்தை வைத்துக்கொண்டு 
ஒரு பெண்ணை வரவழைத்தான்.அவளும் அவனுடைய ஆள்.அவன்
அழைத்தவுடன் ஈ...எனப் பல்லை இழித்துக் கொண்டு வந்தாள்.
பிறர் மனை நோக்கா பேராண்மைக் காரரான அந்தப் பெரிய மனிதனை 
அறிவிழக்கச்செய்தான்.

என்ன செய்கிறோம் என்று அறியாமல்---- கொஞ்சமும் மனங்கூசாமல்
அவளுடைய தோளில் தொங்கிக் கொண்டுதெருவீதி வழியே இழுபட்ட நடையில் ஊராரெல்லாம் வேடிக்கை பார்க்கும் படிஉளறிக் கொண்டே ஊர் வலம் சென்றார்.

இந்த அற்புதக் காட்சியை ஊரே வேடிக்கையாகவும் வினோதமாகவும்
பாரத்துப் பாரத்துக் கைகொட்டிச் சிரித்தது.

"சீச்சீ இவனா பெரிய மனிதன்...........................இவ்வளவு கேவலமாகப் போனானே............."
என ஒருமையில் திட்டடித் தீர்த்தனர்`

கவுரவம், பதவிவி, பட்டம் அவை எல்லாமே ஒரே நாளில்காணாமல் போய்விட்டதே..................குடியினாலே..........................

ஒரு நாள் குடித்தாலென்ன ................. பல நாள் குடித்தாலென்ன!.................
அது முக்கியமே அல்ல..
அவர் தெரிந்து குடித்தாரா..................... தெரியாமல் குடித்தாரா...............!
அதைப்பற்றி யெல்லாம்........ யாரும் ஆராயமாட்டார்கள்...............

எவ்வளவு சிறப்போடு வாழ்ந்தவர் ஒரே நாளில் குடியினால் பாவம்  கெட்டவராகிவிட்டார்..அதனால்.அவர் பெற்ற பதவிகளுக்கும் பட்டங்களுக்கும் உரியதகுதியை அவர் இழந்து விட்டார்.அவ்வளவுதான்.

குடி இப்படியும் ஒரு குடியைக் கெடுத்துவிடும்.
நல்லாரைத் தேர்ந்தே சேரவேண்டும்.
ஊருக்கு ஒரு சகுனி இருப்பான்.

கொ.பெ.பி.அய்யா.




கரிசல் காவகயம் 9

கரிசல் மண்ணில் ஒரு காவியம்  9
அத்தியாயம்-9

பெண் விடுதலை

கிழவி மருத்துவ மனையில் கிடந்தாலும் அவள் விதைத்த கன்னி வெடிகள் ராஜாவை கமலாவின் வீட்டை நெருங்க முடியாமல் அச்சுறுத்தியது.ஒட்ட முடியாத அளவில் அந்த இரு வீட்டின் பழக்க வழக்கம் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது.கமலா ராஜாவுக்காக ஒரு பாட்டுப் பாடுவாளே அந்தப் பாட்டு ஒலி கேட்டுப் பல நாட்களாகின.
கமலாவின் பாட்டு ஒலி வெளிவரும் அந்த சன்னல் கதவுகள்மூடப்பட்டிருந்தன.
முன் வாசல்க் கதவும் சாத்தப்பட்டிருந்தது.கமலாவின் ஒரு மெல்லிய குரல் ஒலி கூட வீட்டைவிட்டு வெளியில் கசியவில்லை.ராஜா பித்துப் பிடித்தவன் போல் சன்னல்க் கதவு திறக்காதா எனக்காத் திருந்தான்.
வீட்டைச் சுற்றி அமைதியான சூழல் நிலவியது.இந்த உலகமே சூன்யமாகிவிட்டதோ என்ற பயம் அவனுக்குள் நிறைந்திருந்தது.
அப்போதுகூட கமலாவின் நிலை என்னவோ என்பதே அவன் கவலையாக இருந்தது.அவன் கவலை சரியாகத்தான் இருந்தது.கமலாவுக்கு ஏகப்பட்ட உத்தரவுகள்.அவள் எந்த ஒரு காரணம் தேடியும் ராஜாவைப் பார்க்கவோ பேசவோ கூடாது என்பது கண்டிப்பான தடை உத்தரவு.அப்படி மீறும்போது அவள் அவளுடைய தாய்மாமன் வீட்டிற்கு அனுப்பபடுவாள் எனவும் அவளை மிரட்டி வைத்தனர்.தாய்மாமன்தான் அவளுக்கு தீர்மானிக்கப்பட்டுள்ள மாப்பிள்ளை.அதற்காகவே அவளை பொத்திப் பொத்தி அவளுடைய ஆசைகளையும் கனவுகளையும் அர்த்தமில்லாமல் அடக்கிச் சிதைத்து வைத்தனர்.இது மனித இனதிற்குச் செய்யும் அநியாயம், அக்கிரமம், பாவம் என்றுதான் நாம் நொந்து கொள்ளவேண்டும்.
குறிப்பாக பெண்களே பெண்களுக்கு எதிரியாக இருப்பதுதான் வேதனையில் வேதனை.பெண்விடுதலை பற்றிப் பேசியும் போராடியும் வந்த பாரதியும் பெரியாரும் தோற்றார்களா வென்றார்களா நிச்சயமாகக் கூறத் தெரிய வில்லை.ஆம் இதோ அந்த சுயமரியாதைப் பகலவன் சொன்னதை அப்படியே இங்கே துணிச்சலாகச் சொல்கிறேன்.கேளுங்கள்.” பெண்கள் விடுதலை பெறுவதற்கு இப்போது ஆண்களைவிடப் பெண்களே பெரிதும் தடையாக இருக்கிறார்கள். ஏனெனில், இன்னமும் பெண்களுக்குத் தாங்கள் முழுவிடுதலைக்கு உரியவர்கள் என்கின்ற எண்ணமே தோன்றவில்லை. தங்களுடைய இயற்கைத் தத்துவங்களின் தன்மையையே தங்களை ஆண்களுக்கு அடிமையாகக் கடவுள் படைத்திருப்பதன் அறிகுறியாய்க் கருதிக் கொண்டிருக்கிறார்கள். எப்படியெனில், பெண் இல்லாமல் ஆண் வாழ்ந்தாலும் வாழலாம்; ஆனால் ஆண் இல்லாமல் பெண்ணால் வாழமுடியா தென்று கருதி ஒவ்வொரு பெண்ணும் தன் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறாள். அப்படி அவர்கள் கருதுவதற்கு என்ன காரணம் என்று நாம் ஆராய்வோமே யானால் பெண்கள் வெறும் பிள்ளை  பெறும் எந்திரமாகக் கருதப் படும்  இயற்கைத் தொல்லை ஒன்று இருப்பதால் தான் என்னவோ தாங்கள் ஆண்துணை இல்லாமல் வாழ முடியும் என்பதற்கு எதிராக தன்னைத் தயார்ப் படுத்திக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். அன்றியும் அப்பிள்ளைப் பெறும் இயற்கைக் கட்டாயத்தால் தங்களுக்கு ஆண் துணை அவசியம் இருப்பதால்  ஆண்கள் ஆதிக்கம் ஏற்பட இடமுண்டாகி விடுகின்றது. எனவே உண்மையான பெண்கள் விடுதலைக்குப் பிள்ளை பெறும் இயற்கையின் ஏற்பாட்டை எவர் என்ன செய்ய இயலும்.அதற்காக இயற்கை ஏற்பாட்டுக்கு மாறாக எதைச் செய்தாலும் இயற்கையின் இயல்பு நிலைக்கு எதிர்வினை ஆற்றுவது விபரீத விளைவாகி விடும். என்றே ஐயப்படலாம். இம்மாதிரி இதுவரை வேறு யாரும் சொன்னதாகக் காணப்படாவிட்டாலும் நாம் இதைச் சொல்லுவது பெரிதும் முட்டாள்தனம் என்பதாகச் சமூகம் வசை பாடும் . உலகம் இதை இயற்கைக்கு விரோதம் என்று சொல்லி வன்மையாக கண்டிக்கும். உலகத்தில் மற்றெல்லாத் தாவரங்கள்,
மற்றும் ஜீவப்பிராணிகள் முதலியவை இயற்கை உடன் இணைந்து வாழ்வு நடத்தும் போது மானிட வாழ்க்கையில் மாத்திரம் இயற்கைக்கு விரோதமாக எதைச் சாதித்துவிடக் கூடும்? அதாவது பெரும்பாலும் செயற்கைத் தன்மையாகவே வாழ்வு நடத்தி வருகின்றபோது இந்த விஷயத்திலும் இயற்கைக்கு விரோதமாய் நடைபெறுவதில் ஒன்றும் முழுகிப் போய்விடாது என்பது அருவருப்பாகும்.
அது தவிர, 'பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்திவிட்டால் உலகம் விருத்தியாகாது. மானுடம் வர்க்கம் அழிந்தும் போகும்.அப்புறம் ஆண் பெண் படைப்பின் அவசியம் என்ன?
எனவே இப்படியெல்லாம் யோசிப்பதை பெண்குலமே ஏற்றுக்கொள்ளாது. என்னதான்  விஞ்ஞானம் பல விந்தைகள் படைத்து இருந்தாலும் இப்படி ஒரு கருத்து அபத்தமான அஞ்ஞானமாகும் என அஞ்சி விலகிப் போகிறது.
பெண்ணடிமைத் தன்மை பெண்களை மாத்திரம் பாதிப்பதில்லை. அது மற்றொரு வகையில் ஆண்களையும் பெரிதும் பாதிக்கின்றது. இதைச் சாதாரண ஆண்கள் உணருவதில்லை. ஆனால் நாம் அந்த இடத்தில் அதைப்பற்றிச் சிறிதும் கவலை கொள்வதில்லை. பெண்களைப் பற்றியே நாம் கவலைக் கொண்டு பேசுகின்றோம். தற்கால நிலைமையில் பெண்கள் விடுதலைக்குப் பெண்கள் வேறு எவ்விதமான முயற்சி செய்தாலும் அது சிறிதாவது ஆண்களுக்குக் கஷ்டத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கலாம். ஆனால் இந்தக் காரியத்தில், அதாவது பெண்கள் பிள்ளை பெறுவதில்லை என்கின்ற காரியத்தில் ஆண்களுக்கு எவ்வித கஷ்டமும் கிடையாது என்பதோடு ஆண்களுக்கு இன்பமும் உண்டு என்பதையும் தெரிவித்துக் கொள்ளு கின்றோம். எப்படியெனில் ஒரு மனிதன் தான் பிள்ளைக் குட்டிக்காரனா யிருப்பத னாலேயே யோக்கியமாகவும் சுதந்திரமாகவும் நடந்து கொள்ளப் பெரிதும் முடியாமலிருக்க வேண்டியவனாகி விடுகிறான். அன்றியும் அவனுக்கு அனாவசியமான கவலையும் பொறுப்பும் அதிகப்படவும் நேரிடுகின்றது.
பெண்களின் முழுமையான விடுதலைக்குப் பெண்களே தனக்குள்ள சக்தியை உணர வேண்டும்.போராடத் துணிந்து ஒன்று கூட வேண்டும்.ஒரே குரலில் தங்கள் உரிமையை மீட்டெடுக்கவேண்டும்.அப்போதவர்கள் பாரதியையும் பெரியாரையும் தங்களுக்குள் உயிர்த் துடிப்பாக உள் வாங்கிக்கொண்டு தாமே முன்னேற வேண்டும், 
(தொடரும்)
கொ.பெ..பி.அய்யா.ரர





கரிசல் காவியம் 8

கரிசல் மண்ணில் ஒரு காவியம்.—8
அத்தியாயம்-8
எதிர் பாராதவிதமாக திடு திப்பென்று ஒருவர் தன் சட்டையைப் பிடித்து உலுக்கியவுடன் அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றான் ராஜா.
“டேய் கேக்கிறதுக்கு ஆள் இல்லைன்னு நினைச்சியா!உனக்கு என்னடா அவ்வளவு துணிச்சல்”எனப் பேசிக்கொண்டே அவனுடைய கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான்.அதோடு விடவில்லை அவனைக் காலால் உதைத்துக் கீழே சாய்த்து முரட்டுத்தனமாக மாறி மாறி அடித்தான்.இதைக்கண்ட ராஜாவின் தாயார் அவன் மேலே விழும் அடிகளை தடுக்க முயன்று கதறி அழுதுகொண்டே அவனுக்கு விழும் அடிகளை அவளே வாங்கினாள்.இந்தக் கொடுமையை பார்த்த ஊர்மக்கள் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க அவர்களின் மனச்சாட்சி இடம் கொடுக்கவில்லை.
நடந்த பிரச்சனைக்கு சம்மந்தமே இல்லாமல் உள்ளே புகுந்து அடாவடிசெய்த அந்த வில்லனை நடந்த நிகழ்வுகளையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த நடுநிலைக்கூட்டம் அவனை சுற்றிவளைத்து தர்ம அடி கொடுத்து விலக்கிவிட்டனர்.அவன்தான் ஏழுவழியான் ஏழுமலை.ஊருக்கு ஒரு சகுனி இருப்பான் என்று சொல்வார்கள் அல்லவா,அவன்தான் இவன்.ஊருக்குள் குழப்பம் விளைவித்து ஊர் மக்களை காவல் நிலையத்திற்கு அலைய விட்டு வீண் செலவு செய்ய வைத்து அதிலே வயிறு வளர்க்கும் வம்புக்காரன் இவன்.கிராமப் பஞ்சாயத்து தேர்தல் வந்தாலே இவனுக்கு நல்லவேட்டைதான்.
கிராமத்தில் போட்டி இல்லாமல் ஒரு நல்லவரை பஞ்சாயத்துத் தலைவராக தேர்ந்து எடுக்கலாம் என கிராமம் முடிவெடுத்தாலும் இவன் அதற்கு உடன்பட மாட்டான்.எவனையாவது ஒரு ஏமாந்தவனை உசுப்பேற்றி போட்டியை உருவாக்கி அந்த அப்பாவியை கடனாளியாய் ஆக்கிவிடுவான்.
ஆகவே இந்த ஏழுவழியானைக் கண்டாலே ஊரில் பெரும் பாலான மக்களுக்கு எரிச்சலாகத்தான் இருக்கும்.அதனால்தான் இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான் அன்று ஆத்திரம் தீர அடித்துத் துவைத்துப் பிழிந்து விட்டனர்.ஊரே ஒன்று கூடிவிட்டதைக்கண்ட அவன் துண்டைக்காணோம் துணியைக்காணோம் எனத் தப்பித்து ஓட்டம் பிடித்து விட்டான்.இதுதான் கிராமத்துக்கும் நகரத்துக்கும் உள்ள வேறுபாடு.நகரத்தில்அக்கம் பக்கம் வீட்டார்என்றுகூட அண்டிப் பழகமாட்டார்கள். ஐக் அடுத்த வீட்டில் என்ன நடந்தாலும் கண்டு கொள்ளாமல் எந்திரத்தனமான வாழ்க்கை வாழ்வார்கள்.பாசம் பரிவு நேசம் என்ற புரிதல் இல்லாத சலனமற்ற மனிதர் என்ற மனிதராய் வாழ்வார்கள்.
ஆனால் கிராமம் இதற்கு நேர்மாறாய் இருக்கும்.கிராமத்தின் பரப்பும் கூட்டமும் குறுகி இருக்கும்.ஆனால் மனது விசாலமாய் இருக்கும்.
ஒருவருக் கொருவர் அந்நியோன்யமாய் ஒரு குடும்ப உணர்வாய் ஒரே பந்தமாய் பழகியும் உதவியும் புரிதலோடுவாழ்வார்கள்.
எந்தப் பக்கம் நியாயம் இருக்குமோ அந்தப்பக்கம் ஒட்டு மொத்தமாகச் சேர்ந்து நிற்பார்கள்.அதாவது அந்தக்கிராமம் ஒரு குட்டி சாம்ராஜ்யம் என்றும் கூறலாம்.அந்தக்கிராமத்தில் என்ன பிரச்சனைகள் நிகழ்ந்தாலும் அவ்வளவு எளிதில் காவல் நிலையம்வரை போகாது.
அந்த அளவிற்கு கிராமத்தினர் பஞ்சாயத்துத் தலைவருக்கு மதிப்பும் அளித்து வந்தனர்.
ராஜாவும் ஒரு நல்ல பையன்.எந்த வம்பு தும்புக்கும் தலையிடமாட்டான்.தன் கல்வியில் மட்டுமே கவனமாக இருப்பான்.அதனால் கிராமத்தார் அவன் மீது ஒரு அலாதி அன்பு வைத்திருந்தனர்.
அவனுடைய அம்மாவும் ஊரோடு ஒன்றி வாழ்ந்து வந்தாள்.அந்த ஊரில் யார் வீட்டிலும் நல்லது கெட்டது எது நடந்தாலும் இவள் முதல் ஆளாய் நின்று இறுதிவரை எல்லாப் பணிகளையும் உதவியாகச்செய்வாள்.
ஆகவே அவளைப்பற்றி 
யார் என்ன சொன்னாலும் ஊர் நம்பாது.அப்படித்தான் அன்றும் ஊர் அவள் பக்கம் நின்றது.அன்று அந்தகிழவியின் அபாண்டமான பேச்சு அவளை மட்டுமல்ல ஊரையே காயப்படுத்திவிட்டது.இளம் வயதில் விதவையானாலும் தன் மகனுக்காக தன் சுய சுக துக்கங்களை எண்ணாது தன் மகனின் எதிர் காலமே லட்சியம் எனக் கொண்டு ஒரு சத்திய வாழ்க்கை வாழ்ந்து வந்தாள்.அதனால் அந்த ஊர் அவளுக்கு பக்க பலமாக இருந்தது.
கமாலாவின் ஆச்சியை வண்டியில் ஏற்றி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து துணையாக கிராமத்துத் தலைவரும் உடன் சென்றார்.(தொடரும்)
குறிப்பு:இனி அடுத்தும் வரும் தொடர்கள் ஒருநாள் விட்டு மறுநாள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும்.என்பதை நேயர்களின் கவனத்திற்கு மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொ.பெ.பிச்சையா.

கரிசல் காவியம்7

கரிசல் மண்ணில் ஒரு காவியம். 7
அத்தியாயம் 7
நல்ல வேளை அந்தக் கல் கிழவியின் காலை மட்டும் காயப்படுத்தியது.இரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது.கமலாவின் அப்பா ஒரு பெரிய வீச்சரிவாளோடு வேகமாகப் பாய்ந்து வந்தார்.அரிவாளே தொட்டும் பாராத அந்த மனிதர் கொலை வெறிக் கோபத்தோடு கொதித்து வந்தார்.ஊரே கூடிவிட்டது வேடிக்கை பார்ப்பதற்கு.கமலாவின் அப்பாவை அக்கம் பக்கம் நின்றிருந்தவர்கள் அவரைக் கட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள்.
“உங்க அம்மாவுக்குதான் ஒன்னும் ஆகலில்லயே அப்புறம் என்ன!”என அவரை சமாதானப் படுத்தி அரிவாளைப் பிடிங்கிக் கொண்டார்கள்.
“அட விடுங்கய்யா அந்தக் கல்லு எங்கம்மா தலையில விழுந்திருந்தா என்ன ஆயிருக்கும்.அவ செத்திருந்தா உசுர யாருய்யா குடுப்பா.இன்னிக்கு இந்தப் பயல ரெண்டுல ஒன்னு நாங் பாதுர்ரேன்.டேய் உன்னைய சும்மா விட மாட்டண்டா. உன்னப் போலிசில மாட்டிவிட்டு என்ன பண்றேன்னு பாருடா.
நீ வாம்மா போலிசுக்குப் போகலாம்.”எனக்கூறி காவல் நிலையத்திற்குப் புறப்படத் தயாரானார்கள்.

அப்போது ஒரு பெரியவர் குறுக்கிட்டார்.”யோவ் முத்துச்சாமி கொஞ்சம் பொறுமையா இருமைய்யா.போலிசு அது இதுன்னு போனா பல பல பிரச்சனைகள் வருமையா.போலிசுக்குப் போனா பிரச்சன முடிஞ்சிருமா?அவங் வந்து என்ன பண்ணுவாங் அங்குட்டு ஆயிரம் இங்குட்டு ஆயிரமுன்னு புடுங்கிக்கிட்டு மேலும் மேலும் பகையத்தான் வளத்து விடுவாங்க.அதெல்லாம் வேண்டாமய்யா எல்லாம் பேசித் தீத்துக்கலாம்.ஊர்ப் பஞ்சாயத்துன்னு ஒண்ணு இருக்குல்ல.அதுல பாத்துக்கலாம்.”என அந்தப் பெரியவர் சமாதானப் படுத்தினார்.இன்னும் கூட்டம் கூடி விட்டது.

இன்னொருவர் கூட்டத்தை துளைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார்.”யோவ் என்னய்யா பேசுறீங்க!அந்தக் கல்லு படாத இடத்தில பட்டு அந்தக் பெரியம்மா செத்திருந்தா என்னய்யா ஆயிருக்கும்.
கொலகாரப்பாவி. ஒரு கொலை செய்ய முயற்சி பண்ணியிருக்காங் அவன ஊருக்கூட்டம் போட்டுப் பாராட்டப் போறீங்களா!இதுக்கெல்லாம் போலிசுக்குப் போனாதாங்யா சரியா வரும்..நீ வாண்ணே நாம போலிசுக்குப் போலாம்.”அவர் எரியிற தீயில எண்ணையை ஊற்றினார்.

அப்போது வெள்ளை மீசைக்காரர் ஒருவர் நிதானமாக பொறுப்போடு பேசினார்.
“இந்தா பாரு முத்துசாமி நாங் சொல்றதக் கேளு !ஓங் வீட்ல ஒரு வயசுக்கு வந்த பொட்டப்புள்ள இருக்கு.போலிசுக்குன்னு போகும்போது விஷயம் பெருசாயிரும்`.போலிசுன்னு போனா பேப்பர்ல வந்துரும்.வெளியூருக்
கெல்லாம் தெரிஞ்சா ஒவொருத்தரும் ஒவ்வொரு விதமா பேச ஆரம்பிச்சுருவாங்க.போலிசும் வேண்டாத கேள்வியெல்லாம் நோண்டி நொண்டிக் கேப்பாங்க அப்புறம் அசிங்கமாப் போயிர்ம்பா.அவனும் அப்படிப் பையன் இல்லப்பா.உங்க அம்மாவுக்கும் பேசத் தெரியலப்பா .பெத்த தாயப் பத்தி தப்புத் தப்பாப் பேசினா யார்தான் பொறுத்துக்கிட்டு இருப்பாங்கப்பா.சரி வா கூட்டதில பேசிக்கலாம்”என நியாயம் பேசி முத்துசாமியின் கோபத்தை தணித்தார் அந்த மீசைக்காரர்.

கோபம் தணிந்த முத்துசாமி “கிழவி வாய வச்சுக்கிட்டு சும்மா இருந்தாத்தான.”
அம்மாவின் மீது ஆவேசமானார்.
“அட விடப்பா !அம்மாவ ஆஸ்பதிரிக்கிக் கூப்புட்டுப் போக வழியப்பாரு.
டேய் மாரிச்சாமி!வண்டியப்போடுரா!ஆச்சியை ஆஸ்பதிரிக்கிக் கூப்புட்டுப் போகலாம்.”எனப் பெரியவர் முடித்ததும் நிலைமை சாகச நிலைக்குத் திரும்பியது.மாட்டு வண்டியும் தயாராகி வீட்டு வாசலுக்கு வந்தது.ஆச்சியைத் தூக்கி மாட்டு வண்டியில் ஏற்றினார்கள்.

அப்போது இன்னொருவர் “ஏம்பா முத்துசாமி இன்னொரு முக்கியமான விஷயம்பா!இந்தக் காயம் எப்படி ஏற்பட்டதுன்னு ஆஸ்பத்திரியில கேப்பாக.அப்ப சண்ட அது இதுன்னு உளறிக்கொட்டியிராத .அம்மா வீட்ல மாவாட்டிட்டு ஆட்டுக்கல்ல வெளிய எடுத்துக் கழுவும் போது அந்தக் கல்லு தவறி காலுல விழுந்து காயமாயிருச்சின்னு உண்மைய மாத்திச்சொல்லு.புரிஞ்சதா.

முத்துசாமியும் தலையை ஆட்டினார்.வண்டியும் கிளம்ப ஆரம்பித்தது,மாரிசாமி ,”ட்டர ....தே ..தே”என வண்டியில் பூட்டிய மாட்டை புறப்பட ஆணையிட்டார்.வண்டி மெல்ல நகர்ந்தது.

திடீரென ஒரு முரட்டுக்குரல்."நிப்பாட்ரா வண்டிய “என வண்டியை வழி மறித்து நிறுத்திய வேகத்தில் நேரா ராசாவிடம் போனார்.யாரும் எதிர்பாராத
திருப்பமாக ராசாவை சட்டையைப் பிடித்து அப்படியே அலாக்காத் தூக்கினார்

(தொடரும்)
கொ.பெ.பி.அய்யா.

    .  .    

கரிசல் காவியம் 5

கரிசல் மண்ணில் ஒரு காவியம்.
அத்தியாயம்.5

மகா பாரதத்தில் என்னை அதிகமாகப் பாதித்த பகுதி நளதமயந்தி  அன்னத் தூது. அதையே தேர்ந்து படிக்கத் தொடங்கினேன்.

பிருகதஸ்வர் சொன்னார்,"வீரசேனன் மகனான நளன்என்றொரு மன்னன் இருந்தான்.அவன் பலம் வாய்ந்தவனாகவும், அழகனாகவும்,குதிரைகள் பற்றிய அறிவை அறிந்தவனாகவும், விரும்பிய அனைத்து சாதனைகளைச் செய்தவனாகவும் இருந்தான். அவன் {நளன்} தேவர்களுக்குத் தலைவனைப் போல மன்னர்களுக்குத் தலைமையானவனாக இருந்தான். எல்லோருக்கும் மேம்பட்டவனான அவன், புகழில் சூரியனைப் போல இருந்தான். அவன் நிடதநாட்டு மன்னனாக இருந்து, வேதமறிந்த பிராமணர்களின் நன்மையில் எண்ணம் உள்ளவனாகவும், பெரும் வீரத்தைக் கொண்டவனாகவும் இருந்தான். அவன் உண்மை பேசுபவனாகவும், பகடையில் விருப்பம் உள்ளவனாகவும், பெரும் பலம் வாய்ந்த படைக்குத் தலைவனாகவும் இருந்தான். ஆண்களுக்கும் பெண்களுக்கும் அன்பால் விருப்பமுள்ளவனாகவும், பெரும் ஆன்மாவால் ஆசைகளை அடக்கியும் வாழ்ந்தான். அனைவரையும் காத்து, வில்லாளிகளில் முதன்மையானவனாக இருந்து, மனுவைப் போன்றவனாக இருந்தான்.
அவனை போலவே விதர்பர்கள் {விதர்ப நாட்டு மக்கள்} மத்தியில், பீமன்(இவன் பாண்டவப் பீமன் அல்ல பீமன் என்ற பெயர் கொண்ட ஒரு மன்னன் இருந்தான். அவனும்  பயங்கரமான பராக்கிரமும், வீரமும் கொண்டவனாகவும், குடிமக்களுக்கு நன்மை செய்பவனாகவும், அனைத்து அறங்கள் கொண்டவனாகவும் இருந்தான். ஆனால், (இவையெல்லாம் இருந்தும்), பிள்ளையில்லாதிருந்தான். அவன் நிலைத்த மனதோடு, ஒரு பிள்ளையைப் பெறுவதற்காக தன்னால் ஆன அளவு முயன்றான்.

ஒரு நாள் அவனிடம் தமனர் என்ற பிரம்ம முனிவர்  வந்தார். மன்னர், அறநெறிகளை அறிந்த பீமன், பிள்ளை பெற விரும்பி, தனது மனைவியுடன் சேர்ந்து அந்த சிறப்புமிக்க முனிவரை மரியாதையுடன் வரவேற்று திருப்தி செய்தான். இதனால் மிகவும் மகிழ்ந்த தமனர், அந்த மன்னனுக்கும் அவனது மனைவிக்கும் ரத்தினம் போன்ற மகளையும், உயர்ந்த ஆன்மாவும், பெரும் புகழையும் கொண்ட மூன்று மகன்களையும் வரமாகக் கொடுத்தார். அந்தக் குழந்தைகள்) முறையேதமயந்தி, தமன், தாந்தன், தமனன் ஆவர். அந்த மூன்று மகன்களும் அனைத்து சாதனைகளையும் செய்பவர்களாகவும்,கொடூரமான முகத்தோற்றம் கொண்டவர்களாகவும், கடும் பராக்கிரம் கொண்டவர்களாகவும் இருந்தனர். கொடியிடை கொண்ட தமயந்தி, அழகாலும், பிரகாசத்தாலும், அருளாலும், அதிர்ஷ்டத்தாலும், உலகத்தால் கொண்டாடப்படுபவள் ஆனாள். அவள் பருவ வயதை அடைந்த போது, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட நூற்றுக் கணக்கான பெண் பணியாட்களும், பெண் அடிமைகளும், சச்சிக்காக {இந்திரனின் மனைவிக்காக}காத்திருப்பதைப் போல அவளுக்காக காத்திருந்தனர்.

பீமனின் மகளான அந்தக் களங்கமற்றவள், அனைத்து ஆபரணங்களும் பூண்டு, மேகங்களில் இருக்கும் பிரகாசமான மின்னல் போல, தனது பணிப்பெண்களுக்கு மத்தியில் பிரகாசித்தாள். அகன்ற விழி கொண்ட அந்த மங்கை,ஸ்ரீயைப் {லட்சுமியைப்} போலவே பெரும் அழகு படைத்திருந்தாள். தேவர்களுக்கு மத்தியிலோ,அசுரர்களுக்கு மத்தியிலோ, மனிதர்களுக்கு மத்தியிலோ அவளைப் போன்ற அழகு கொண்ட பெண்ணை அதற்கு முன்னர் யாரும் கேள்விப்பட்டதோ, பார்த்ததோ கிடையாது. அந்த அழகான மங்கை, மகிழ்ச்சியால் தேவர்களின் இதயத்தைக் கூட நிறைத்தாள்.

மனிதர்களில் புலியான நளன், மூன்று உலகத்திலும் தனக்கு இணை இல்லாதவனாக இருந்தான். அவன் அழகில் மனித உருக் கொண்ட கந்தர்பன் {மன்மதன்} போல இருந்தான். இவற்றால் வியப்படைந்த கட்டியக்காரர்கள் திரும்பத் திரும்ப நளனின்பெருமைகளைக் கொண்டாடி தமயந்தியிடத்திலும், தமயந்தியின் பெருமைகளை நிஷாத ஆட்சியாளன்  இடத்திலும் புகழ்ந்தார்கள். திரும்பத் திரும்ப ஒருவர் நற்குணங்களை மற்றவர்கள் கேள்விப்பட்டு ஒருவர் மேல் ஒருவர் பார்த்துக் கொள்ளாமலேயே ஈர்க்கப்பட்டனர். 

பிறகு, நளன் தனது இதயத்தில் இருந்த காதலைக் கட்டுப்படுத்த முடியாதவனானான். அவன் நீண்ட நேரத்தை நந்தவனத்துடன் சேர்ந்த தனது உள் அறையில்  கழிக்க ஆரம்பித்தான். அங்கே  நந்த வனத்தில் தங்க இறகுகள் கொண்ட அன்னங்கள் பல உலவுவதைக் கண்டான்.அவற்றில் ஒன்றைத் தன் கரங்களால் பற்றினான். அதன் காரணமாக அந்த விண்ணதிகாரி {அன்னம்}, நளனிடம், "உன்னால் நான் கொல்லப்படலாகாது. ஓ மன்னா, நான் உனக்கு ஏற்புடைய ஒரு காரியத்தைச் செய்வேன். ஓ நிஷாதர்களின் மன்னா உன்னைத் தவிர வேறு யாரையும் (தனது தலைவனாக அடைய) தமயந்தி விரும்பாதவாறு, அவளிடம் நான் உன்னைக் குறித்துப் பேசுவேன்" என்றது.

இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் அந்த அன்னத்தை விடுவித்தான். அந்த அன்னப்பறவைகள் தங்கள் சிறகுகளை விரித்து விதர்ப நாட்டுக்குச் சென்றன. விதர்ப நாட்டுக்கு வந்த அந்தப் பறவைகள், அவற்றைக் கண்ட தமயந்தியின் முன் பறந்தன. பணிப்பெண்களுக்கு மத்தியில் இருந்த தமயந்தி, இயல்புக்கு மிக்க தோற்றம் கொண்ட அந்தப் பறவைகளைக் கண்டு மகிழ்ச்சியடைந்து, நேரத்தைக் கடத்தாமல் அந்த விண்ணதிகாரிகளைப் {அன்னங்களைப்} பிடிக்க முயன்றாள். இதன் காரணமாக, அந்த அன்னங்கள், அந்த அழகான மங்கையர் கூட்டத்திற்கு முன்பு, எல்லா திசைகளிலும் பறந்தன. அந்த மங்கையரும் ஒவ்வொருவரும் ஒரு அன்னத்தின் பின்னாக அந்தப் பறவைகளைத் தொடர்ந்து சென்றனர். தமயந்திக்கு முன் ஓடிய அன்னம், அவளை தனிமையான இடத்திற்குப் பிரித்து அழைத்துச் சென்று, மனிதக் குரலில் அவளிடம், "ஓ தமயந்தி, நிஷாதர்களில் நளன் என்ற பெயர் கொண்ட ஒரு மன்னன் இருக்கிறான். அவன் அசுவினிகளின் அழகுக்கு நிகராக, மனிதர்களுக்கு மத்தியில் தனக்கு இணை இல்லாதவனாக இருக்கிறான். உண்மையில் அவன் மனித உருக் கொண்ட கந்தர்பன் {மன்மதன்} போல இருக்கிறான். ஓ அழகான நிறம் கொண்டவளே, ஓ கொடியிடையாளே, நீ அவனுக்கு மனைவியானால், நீ வாழ்வதற்கும், உனது அழகுக்கும் ஒரு காரணம் இருக்கும்.நாங்கள் தேவர்களையும், கந்தர்வர்களையும், நாகர்களையும், ராட்சசர்களையும், மனிதர்களையும் கண்டிருக்கிறோம். ஆனால் நளனைப் போன்ற ஒருவனை நாங்கள் இதுவரை கண்டதில்லை. ஆண்களில் நளன் தலைமையானவன் ஆனது போல, நீயும் உனது பெண்ணினத்தில் ரத்தினம் தான். சிறந்தவர்களுடன் சிறந்தவர்கள் சேரும் போதே மகிழ்ச்சி ஏற்படுகிறது" என்றது அன்னப்பறவை.
அன்னத்தால் இப்படிச் சொல்லப்பட்ட தமயந்தி, அன்னத்திடம் "நீ இதே போல நளனிடமும் சொல்" என்றாள்.  அன்னப்பறவை நிஷாதர்களின் நாட்டிற்குத் திரும்பி, அனைத்தையும் நளனிடம் கூறியது.

கமலா கதையை ஆர்வமாக கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்தவள் என்னையும் கவனித்தாள்.
“சரியான ஆள்தான் நீ”எனச்சொல்வதுபோல் மௌனமாகப் புன்னகைத்துத் தலை குனிந்தாள்.ஆனால் ஆச்சி என்னையும் கமலாவையும் மாறி மாறி நோக்கினாள்.

(தொடரும்)

கொ.பெ.பி.அய்யா.

கரிசல் காவியம்2

கரிசல் மண்ணில் ஒரு காவியம்.(அத்தியாயம் 2)

அவள் வீட்டையே தினமும் என் கால்கள் ஓயும் வரை சுற்றிச்சுற்றி வருகின்றன.ஆனால் சிறைக்குள் அடைப்பட்ட அந்தச்சிட்டை மட்டும் என்னால் காணமுடியவில்லை.கால்கள் ஓய்ந்தாலும் என் இளம் மனம் வாடாமல் தேடிக்கொண்டே இருக்கிறது.என்னைப்பற்றிக்கூட நான் அதிகமாக கவலைப்படவில்லை.அவளுடைய சுதந்திரம் இப்படி அநியாயமாக பறிக்கப்பட்டுள்ளதே என்பதுதான் என் ஆதங்கம்.பாவம் பாடிப்பறந்த அந்தப்பச்சிளம் குருவி எதற்காக இன்று பூட்டி வைக்கப்பட்டுள்ளது என்பது எனக்குப்புரியாவில்லை.கேட்டால் அவள் வயதுக்கு வந்துவிட்டாள் என்கிறார்கள்.

                    பருவம் அடைந்த பெண்ணை வயதுக்கு வந்துவிட்டாள் என்ற ஒரு காரணம் காட்டி அவள் ஒரு பாதுகாக்கப்படவேண்டிய பொருள் எனக் கருதி அவளைப் பிற ஆண்களின் கண்களில் படாமல் ஒளித்து வைப்பது அறிவுத்தனம் என்பது அவர்களின் அப்பாவித்தனம்.பெண் என்பவளும் சிந்திக்கத் தெரிந்த ஒரு மானுடப்பிறவிதான் என்பதை சமுதாயம் இன்னமும் ஒப்புக்கொள்ள மறுப்பதை எண்ணும்போது என்போன்ற மனித நேயம் மதிப்பவர்களுக்கு வலிக்காமலில்லை. எழுதுவதும் வாசிப்பதும்:பேசுவதும் பழகுவதும் சமுதாயத்தில் என்ன மாற்றம் விளைவித்துள்ளது என்பதும் எனக்கு ஏதும் புலப்படவில்லை.அதை புரிந்துகொள்ளும் வயதும் அனுபவமும் எனக்கு அப்போது இல்லை.இப்போதும் அந்நிலை சில கிராமங்களில் சில குடும்பங்களில் இல்லாமலில்லை.

        இந்நிலை மனித மனங்களில் இன்னமும் ஏன் மிஞ்சியுள்ளது.பெண்களைப் பற்றிய ஐயமா அல்லது அச்சமா?கல்வியறிவு வளராமல் இருந்த அந்தக் காலம்தான் அப்படியென்றால் இன்று கல்வியறிவு வளர்ந்துள்ள நிலையிலும் தொடர்வதும் கவலையாகத்தான் உள்ளது.பாரதி சொன்ன புதுமைப்பெண்கள் வரிசையாக வரத்தொடங்கிவிட்டார்கள்.காலத்தின் கட்டாயம் பெண்களை கல்வி கற்கவும் பணிகளில் பரவலாக கடமை ஆற்றவும் காலம் கனிந்து வருவது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் பெண்களுக்கு ஏற்படக்கூடிய வன்கொடுமைகளை பார்க்கும் போது மீண்டும் பெண்களின் உரிமை பறிக்கப்பட்டு முந்திய நிலைக்கே நகர்தப்படுவார்களோ என்ற கவலையும் துளிர்க்கிறது.

       இப்போது புரிகிறது அன்று ஏன் அவளுக்கு அந்நிலை என்று.அவள் வீட்டிலிருந்து என் வீட்டை பார்க்கும் வசதியாக ஜன்னல் ஒன்று உண்டு.அந்த ஜன்னல் பக்கமாக நின்று பாட்டொன்று பாடுவாள்.அந்தப்பாட்டு இப்போதும் என் நினைவுகளில் முனுமுனுத்துக்கொண்டே இருக்கிறது.
”கண்ணா கருமை நிறக் கண்ணா”
எனும் அந்தப்பாடல்தான் அது.ஆமாம் நான் கொஞ்சம் கருப்புதான்.ஆனாலும் பார்க்கப் பார்க்க என்னை யாருக்கம் பிடிக்கும்.அப்படித்தான் அவளும் சொல்வாள்.அவளோ தங்க நிறம்.தகதகவென தாராளாமாய் இறைவன் அப்படியொரு வண்ணத்தை அவளுக்கு அள்ளி வழங்கியிருந்தான்.அவள் சிரித்துவிட்டால் போதுமே அப்பப்பா மாலை நேர இளஞ்சிவப்பின் ஊடே வெள்ளொளி கீறிக்கொண்டு வருவதுபோல் ஒரு ஈர்ப்பு.

        அப்படிப்பட்ட அழகுச்சிலையை அலங்கரித்து கம்பிக்கதவுகளுக்குள் பூட்டி வைத்தாற்போல் அந்த மங்கிய ஒளியிலும் அவள் பிரகாசிப்பாள்.இப்படிதான் தினம் தினம் அவள் தரிசனம்.அதுவும் அது கிராமத்து ஜன்னல் .முகம் மட்டும்தான்.தரிசனம்.சிறைச்சாலையில் கூட அப்படித்தான்.அனால் எட்டாத உயரத்தில் என்பார்கள்.அவளுக்கு அது எட்டும் தூரம்.ஆனால் நானோ எட்டி எட்டித்தான் குதிக்கவேண்டும்.நான் குதிக்கக் குதிக்க அவள் சிரிப்பாள்.அவள் சிரிக்கச்சிரிக்க நான் குதிப்பேன். 
      
       வாழ் நாளில் நிகழும் எத்தனையோ சந்திப்புகள் .ஆனால் அவை அத்தனையும் நினைவில் நிற்பதில்லை.சில நினைவுகள் மட்டுமே அழியாமல் நாளெல்லாம் நெஞ்சில் இன்னும் நித்தம் நித்தம் புதுப்பிக்கப்படுகின்றன.ஒரு நாள் வழக்கம்போல் அந்தப்பாட்டைப் பாடினாள்.அந்தப் பாட்டைக்கேட்டாலே எனக்குள்ளே ஒரு இனம் புரியாத துள்ளல்.ஜன்னலைத் தேடி ஓடோடி வந்தேன்.அப்போது என்னைக் கைஜாடையில் மெல்லிய குரலோடு
“டேய் ராசா உள்ளே வாடா “
என அழைத்தாள்.பதிலுக்கு நானும் மெல்லிய குரலில்
எதுக்கு?உங்க ஆச்சி இருக்கும்.அது “என ஆசையிலும் அச்சத்திலும் அசடு வழிந்தேன்.

“யாருமே இல்ல.ஆச்சி வயலுக்குப் போய்ட்டா.அம்மா.குளக்கரைக்கு துணி துவைக்கப் போய்ட்டா.அவங்க வர நேரமாகும்.வா!”
எனத் தைரியம் கூறி உள்ளே அழைத்தாள்.”
அப்படியா.சரி வாறேன்.”
எனத் துள்ளிக் குதித்து கஞ்சிக்கே வழி இல்லாதவன் கையில் பஞ்சுமிட்டாய் கிடைத்தால் எப்படி இருக்கும்?அப்படியொரு உற்சாகத்தில் வாசல் பக்கமாக ஓடினேன்.சாத்தியிருந்த கதவை மெல்லத் தள்ளினேன்.முன்பெல்லாம் எந்தப் பயமோ தயக்கமோ இன்றி சர்வசாதாரணமாக அவள் வீட்டிற்குள் போவேன் வருவேன்.ஆனால் இன்று ஏனிந்த அச்சம்.அதோடு ஒரு தயக்கம்.புரியவில்லை.

கதவைப் பிடித்துக்கொண்டே நின்றேன்.யார் வந்தாலும் சத்தம் இல்லாமல் ஓடிவிடலாம்.அப்படியொரு வசதியில் உசார் நிலையில் நின்றேன்.என்னிலையைப்பார்த்த அவள்
“என்னடா இது பிச்சைக்காரன் மாதிரி.உள்ள வாடா”என்றாள்.
இல்ல..............பரவாயில்ல இருக்கட்டும்.ஆச்சி திடு திப்புன்னு வந்தாலும் வந்துரும்.அது ஏதாவது சொல்லி உன்னத்தான் பேசும்.சொல்லு எதுக்குக் கூப்பிட்ட.”எனப்பயந்த நானும்.
“அடப்பாவி....ஏண்டா இப்படிப் பயந்து நடுங்கிற”
என தைரியத்தில் அவளும்.மாறி மாறி சொன்னதையே திரும்பத் திரும்பப் பேசிக்கொண்டிருந்தோம்.அவள் கதவுக்குப்பின்னாலும் நான் கதவுக்கு இடையிலும் நிற்கிறோம்.ஆனால் எப்போதும் போலும் உள்ள அந்த பழைய விளையாட்டுத்தனம் இப்போது எங்கே போனதோ விளங்கவில்லை.அவள் உள்ளே அழைக்கிறாள் நான் மறுக்கிறேன்.ஏதோ ஒன்று என்னை அவளிடமிருந்து என்னை விலகி நிற்கச்சொல்கிறது.ஏன்?   


கொ`பெ`பி.அய்யா.