கரிசல் மண்ணில்
ஒரு காவியம்.
அத்தியாயம் 3
வாசலைத் தாண்டி
நான் உள்ளே செல்ல எனக்குள் துணிவு இல்லை.ஏன் அந்த அச்சம். அது எனக்கு விளங்கவில்லை
ஆனாலும் அவளுடைய புதிய தோற்றம் அவள் முன் என்னை அவளைவிடச் சின்னவனாக
குறுக்கிவிட்டது.அவளிடம் அந்தக் குறும்புத்தனம் மறைந்திருந்தது.அவள் முகமே
புதுப்பொலிவாய் சொலித்தது.என்னிலும் வயது கூடிப் பெரியவளாகத் தோன்றினாள்.பாவாடை
சட்டை மாறி கூடுதலாகத் தாவணி அவள் பருவ மாற்றத்தை விலாசம் காட்டியது.ஏனோ
தெரியவில்லை அவளை போடி வாடி என அழைக்க மனம் துணியவில்லை.என்னை அறியாமலே அவள் மீது
ஒரு மரியாதை ஏற்படுகிறது.அவள் பெரிய மனிசி ஆகிவிட்டாள் வயதுக்கு வந்துவிட்டாள்
என்ற சொற்களுக்கான விளக்கம் இப்போது எனக்குப் புரிகிறது.
.அப்போது எனக்கு
வயது பதினான்கு.அவளுக்கும் அதே வயதுதான் ஆனாலும் அவளுக்குள் தெளிந்த அந்த முதிற்சி
எனக்குள் வளற்சி இல்லை.அதுதான் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள தலைமுறை
இடைவெளி.ஆணைவிட பெண்ணுக்கு அனுபவ ஞானம் வேகமாக வளர்கிறது என்பதும் அறிவியல்
உண்மை.அதனால்தான் ஆணைவிட பெண்ணுக்கு திருமண வயது குறைவாக இருக்கவேண்டும் என
அக்காலப் பெரியவர்கள் கண்டறிந்து சொன்னார்கள்.குறைந்த பட்சம் பெண்ணைவிட ஆணுக்கு
ஐந்து முதல் பத்து வயது அதிகம் இருந்தால்தான்.ஆணுக்கும் பெண்ணுக்கும் அனுபவ ஞானம்
சமநிலை ஆகும் என்பது பழமை கணித்த கணக்கு.ஆணைவிட பெண்ணுக்கு வயது இடைவெளி அதிகமான
நிலையில் அவர்களுக்குள் புரிதல் இடைவெளி அதிகரிக்கும்.இதைதான் ஆங்கிலத்தில் ஈகோ
என்று சொல்வார்கள். அப்படியான நிலையில்தான் குடும்பத்தில் சில சமயங்களில் பிரச்சனைகள்,குழப்பங்கள்.ஏற்படும்பொழுது அவர்களால் அதைச் சமாளித்துச் சரிக்கட்டி
அனுசரித்து இணைந்து வாழ முடியாமல் பிரிய வேண்டிய கட்டாய சூழலுக்குள் அநேக தாம்பத்ய
உறவுகள் தள்ளப்படுகின்றன.
எங்களுக்குள்
நீண்ட நேர விவாதம் இப்படித்தான் நீண்டன.
“ஏய் உள்ள
வாலே.....ஆச்சி வந்தால் என்ன சொல்வாள்.......அவட்ட நாங் சமாளிச்சுக்கிறேன்........`நீ வாலே”அவள் துணிச்சலாக என் கையைப்பிடித்து
இழுக்கிறாள்.ஆனால் நான் பயத்தில் அவள் கையைத் தட்டுகிறேன்.
“ஏல
ஒன்னுமில்லல........எங்க வீட்ல நேத்து பணியாரம் செஞ்சாங்க........ரெண்டத் தாரேன் சாப்பிட்டுப்
போல”மீண்டும் என் கையைப்பிடித்து உள்ளே
இழுக்கிறாள்.
“வேண்டாம்..........நாங்
இங்கேயே நிக்கிறேன்..........நீ போயி எடுத்துட்டு வா..........ஆச்சி
பாத்தா..வையும்..........எனக்குப் பயமா இருக்கு.........என்ன விடு “எனப் பதறிய மொழியில் மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்லுகிறேன்.
‘சரி இவங்
வேலைக்கு ஆகமாட்டான்” என எண்ணி அவளே அலுத்துக்கொண்டாளோ
என்னவோ,விடுவிடுன்னு வீட்டுக்குக்குள்ளே போனாள்.ரெண்டு
பணியாரத்தை எடுத்துக்கொண்டு வந்தாள்`”இந்தா......போல....பயந்தான்கொள்ளிப்
பயல..நீ..உன்ன என்ன நாங்......அவிச்சா தின்னுடப் போறேன்.....பேசி ரொம்ப நாளாச்சே
..பேசலாமுன்னுதான கூப்பிட்டேங்.......இப்படிப்பயந்து சாவுர”என சலித்துக்கொண்டே அவளும் வெளியே வந்து அந்த முருங்கை மரத்தைக்
கட்டிப்பிடித்துச் சுற்றினாள்.
நாங் பனியாரத்தை
தின்னாமல் கையில் வைத்துப்பார்த்துக் கொண்டே நின்றேன்.என்னைக்கவனித்த அவள் என்ன
நினைத்தாளோ தெரியவில்லை.கலகலவெனச்சிரித்தாள்.
“ஆமா..ஏஞ்
சிரிக்கிற.....உனக்கு கொஞ்சங்கூட பயமே இல்லயா” நானும் பேச ஆரம்பிச்சேன்.
“அட போடா
களிமண்ணு.....ஆமா என்னல பயம் உனக்கு,.......ஏண்டா இப்படி ஆயிட்ட......என்னல ஆச்சு உனக்கு.” என என்னை ஏளனம் செய்து மீண்டும் சிரித்தாள்.
வேறொன்னுமில்ல
உங்க ஆச்சியக் கண்டாத்தாங் எனக்குப் பயமா இருக்கு....கமலா பெரிய மனிசி ஆயிட்டா
..அவட்ட இன்னுமே நீ பேசக்கூடாதுன்னு எங்க அம்மாவும் சொல்லிட்டா
..அதான்.............”
அதாங்
பயந்துட்டயாக்கும்....அடப்போடா முட்டாள்....பெரியவங்க இருக்கும் போது அப்படி
இருந்துக்க வேண்டியதுதாங் ....அவங்க இல்லாத போது இப்படி நாம பேசிக்க
வேண்டியதுதாங்.”எனப் பெண்ணுக்கே உரிய
புத்திசாலித்தனமாகவும் பேசினாள்.அப்போது அவள் அறிவை வியந்து பாராட்டும் பக்குவம்
இல்லை.அதை இப்போது எண்ணும் போது எனக்குப் பொறாமையாகவும் ஏமாற்றமாகவும்
இருக்கிறது.என்ன இருந்தாலும் சமயோசிதப் புத்தி என்பது பெண்களுக்குக் கொஞ்சம்
அதிகம்தான்.அதனால்தான் பெண்ணுக்குப் பின் புத்தி என்பார்கள்.ஆமாம் அவள் பின்னும்
பின்னும் என அவள் புத்தி விரிந்து கொண்டே பெருகும்.அதனால் பெண்கள் அவ்வளவு எளதில்
ஏமாந்துவிடமாட்டர்ர்கள்.
விடுதலையான
கூண்டுக்கிளிபோல் என்னையே மகிழ்ச்சியில் பார்க்கிறாள்.நேரிலே பூக்கும்
மல்லிகைபூவாய் சிரிக்கிறாள்.ஆனந்தக்களிப்பில் அந்த முருங்கை மரத்தைப் பாடாய்
படுத்துகிறாள்.என்ன செய்வது அவள் புரிந்து கொண்டதை நான் புரிந்து கொள்ளவில்லையே.அவள்
வயதுக்கு வந்து விட்டாள்.நான் அப்போது இப்போது போல் விவரமாக இல்லையே.இப்போது
அந்நிகழ்வை நினைக்க நினைக்க எனக்கே கேவலமாக இருக்கிறது.கள்ளமில்லா அந்தப்பிள்ளைப்
பருவத்தை எண்ணிப்பார்க்கும் போது பெருமையாகவும் இருக்கிறது.இறைவன் செய்யும் விந்தை
அது.வளரும் பருவத்தில் அதை ஒளித்து வைத்து வாழும் பருவத்தில்
அள்ளித்தருகிறான்.இறைவன் எவ்வளவு பொறுப்பானவன் பார்த்தீர்களா?எதை எதை எந்த எந்த பருவத்தில் மறைக்க வேண்டுமோ அதை அதை அந்த அந்த
பருவத்தில் மறைத்தும் உணர்த்தியும் விந்தை செய்யும் அவன் சிறப்பே சிறப்பு.
அந்த முருங்கை
மரத்தை அவள் சுற்றி சுற்றி ஆடுகிறாள்.நான் எட்டிநின்றுதான் வேடிக்கை பார்க்கிறேன்.
கொ.பெ.பி.அய்யா
.(தொடரும்)

No comments:
Post a Comment